பாட்னா
வங்கிகளில் கடன் வாங்கிய தொழிலதிபர்கள் மோசடி செய்தது குறித்து பிரதமரும் நிதியமைச்சரும் விளக்க வேண்டும் என பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சத்ருகன் சின்ஹா கூறி உள்ளார்.
பாஜக வின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பாலிவுட் ஹீரோவுமான சத்ருகன் சின்ஹா அரசு குறித்து கடும் விமர்சனங்களை சமீப காலமாக முன் வைத்து வருகிறார். பணமதிப்பிழப்பு, ஜி எஸ் டி, பொருளாதார கொள்கைகள் என பலவற்றிலும் அவரது விமர்சனங்கள் மக்களிடையே பரபரப்பையும், கட்சிக்குள் சர்ச்சையையும் உண்டாக்கி வருகின்றது.
பீகார் மாநில தலை நகரான பாட்னாவில் சத்ருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இந்த அரசும், வங்கிகளும் மோசடி செய்யும் தொழிலதிபர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. வங்கிகளில் நடைபெற்றுள்ள மோசடி குறித்து பொறுப்பான உயர் பதவியிலுள்ளோர் மவுனமாக உள்ளது இந்தியாவில் மட்டுமே சாத்தியமான ஒன்று. விவசாயிகளையும், ஏழை மக்களையும் சிறு கடன் தொகைக்காக துன்புறுத்தும் வங்கிகள் பெரும் தொகையை கடனாக பெற்று ஏமாற்றும் தொழில் அதிகபர்களை கண்டுக் கொள்வதே கிடையாது.
இது போன்ற வங்கி மோசடிகள் குறித்து பிரதமரும் நிதி அமைச்சரும் உடனடியாக மக்களிடம் விளக்கம் தர வேண்டும்.” எனக் கூறினார். மோடி மற்றும் ஜெட்லியின் பெயரை நேரடியாக அவர் கூறாவிட்டாலும் சத்ருகன் அவர்கள் இருவரையும் தான் குறிப்பிடுகிறார் என்பதை செய்தியாளர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்