சென்னை: தமிழ்நாடு புதுச்சேரியில், பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தப்படி இன்று காலை வெளியானது. இதில், 94.56% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. தேர்ச்சியை காண மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராமவர்மா காலை 9:30 மணிக்கு வெளியிட்டா இதில் 94.56% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 92.37 சதவிகிதமும், மாணவிகள் 94.44 சதவிகிதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவர்கள் எழுதினர். குறிப்பாக 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 பேர் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகளை, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in மற்றும் www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களின் மூலமாக 12ம் வகுப்பு மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறியலாம்.
தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அரசு பள்ளிகள் அசத்தல் சாதனை புரிந்துள்ளது. அரசு பள்ளிகள் மூலம் தேர்வு எழுதிய மாணவர்களில் 91.32 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதே வேளையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 95.49 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது.
தனியார் பள்ளிகளில் 96.7 சதவிகித தேர்ச்சியும், மகளிர் மட்டும் படிக்கும் பள்ளிகளில் 96.30 சதவிகித தேர்ச்சியும், ஆண்கள் மட்டும் படித்த பள்ளிகளில் 86.96 சதவிகித தேர்ச்சியும், இருபாலார் சேர்ந்த படித்து தேர்வு எழுதிய பள்ளிகளில் 94.7 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து மதிப்பெண் பட்டியலை (marksheets ) பள்ளிக் கல்வித் துறை விரைவில் வெளியிட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும், மதிப்பெண் பட்டியலை இணையதளத்தில் இருந்த பதிவிறக்கம் செய்து அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், தேர்வு முடிவுகள் மாணவர்களின் வாழ்க்கையை மதிப்பீடு செய்வதற்கானது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.