சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. இதை 8 லட்சம் மாணாக்கர்கள் எழுதுகின்றனர்.
தமிழ்நாடு புதுச்சேரியில் மார்ச் 1ந்தேதி முதல் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இன்றுமுதல் (மார்ச் 4ந்தேதி) 11ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. ஏற்கனவே 11ம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் முடிவடைந்த நிலையில், இன்றுமுதல் எழுத்துத் தேர்வுகள் தொடங்குகின்றன.
இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர். அதாவது, 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். . இதற்காக தமிழ்நாடு முழுவதும் 3,302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாடு, புதுச்சேரியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான |பொதுத்தேர்வு இன்று தொடங்கி, வரும் 25ம் தேதி முடிவடைகிறது. இத்தேர்வை 7,534 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 3.89 லட்சம் மாணவர்கள், 4.30 லட்சம் மாணவிகள் எழுதுகின்றனர்.. கடந்த ஆண்டு 3224 மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் இந்த ஆண்டு 3302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 591 பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரத்து 852 மாணவர்கள் 240 மையங்களில் தேர்வினை எதிர்கொள்கின்றனர். மேலும், சிறைவாசிகள் 187 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக 154 இடங்களில் கேள்வித்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது . பறக்கும் படை உறுப்பினர்கள் 3,200 பேரும் 1134 பறக்கும் படையினரும் தேர்வரை கண்காணிக்கும் பணியில் 46 ஆயிரத்து 700 பேரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்