தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்தது. மார்ச் 24ந்தேதி கடைசி தேர்வு முடிவடைந்த நிலையில், அன்றுமுதல் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏராளமானோர் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு ஜூன் மாதம் மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் 48 லட்சம் விடைத்தாள்கள், சென்னையை விடுத்து தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 200 மையங்களில் சமூக விலகல் மற்றும் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளின்படி நாளை முதல் நடைபெறுகிறது. விடைத்தாள்கள் திருத்தும் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்.
விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு வருவதற்கு தேவையான பயண ஏற்பாடுகள், மையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்தல், சமூக இடைவெளி விட்டு பணி செய்தல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது.“
12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்திய பின்னர், 11-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தப்படும். 15 நாட்களுக்குள் விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்படும். அதனைத் தொடர்ந்து ஜூன் இறுதியில் தேர்வு முடிவு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.