தென்காசி: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே கடந்தசில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மோதலில் காயமடைந்த பிளஸ்2 மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் முக்கூடல் அருகே இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியில் அந்த சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கு மாணவர் ஒருவர் கையில் கயிறு கட்டி வந்ததாக தெரிகிறது. இதை மற்றொரு மாணவர் தரப்பு எதிர்த்த நிலையில் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு மாணவர்கள் இரு தரப்பாக பிரிந்து மோதிக்கொண்டனர்.
இந்த மோதலில் ஒரு மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாணவர்களை சமரசம் செய்து காயமடைந்த மாணவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மாணவன் இன்று பரிதாபமாக பலியாகியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.