தமிழகத்தில் கொரேனா தொற்று உச்சம் பெற்றுள்ளதால், சுகாதாரத்துறை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் 12-ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த கல்விநிறுவனங்கள்,கடந்த ஆண்டு (2020) இறுதியில் மீண்டும் திறக்கப்பட்டன. முதல்கட்டமாக கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு தொடங்கப்பட்ட நிலையில், 2021 ஜனவரி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டுமே திறக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து பலருக்கு தொற்று பரவியதால், 9 முதல் 11-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் 12ம் வகுப்புக்கு மே 3-ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்குவதால் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மாதம் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. தற்போது தேர்தல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. வரும் 8-ஆம் தேதி முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு களை மீண்டும் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
ஆனால், தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து இன்று கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதில், பிளஸ்2 பொதுத்தேர்வு, கொரோனா அச்சுறுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், பொதுத்தேர்வை தள்ளி வைப்பது தொடர்பாக சுகாதாரத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.