சென்னை: தமிழ்நாட்டில் நாளை பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்கள் காலை 9மணிக்கு  தேர்வு எழுதும் மையத்துக்கு வந்தால் போதும் என அரசு தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு நேரடித்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை (மே 5-ஆம் தேதி)  12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நாளை  முதல் தொடங்குகிறது. தொடர்ந்து, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 ஆம் தேதியும், பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 10 ஆம் தேதியும் தேர்வுகள் தொடங்கவுள்ளன.

நாளை தொடங்கும் பிளஸ்2பொதுதேர்வு மே 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.  3,119 மையங்களில் நடைபெறும் இந்த பொதுத்தேர்வை எழுத  8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணாக்கர்கள் தயாராக உள்ளனர்.  3 லட்சத்து 91 ஆயிரத்து 343 மாணவர்களும்,  4 லட்சத்து 31 ஆயிரத்து 341 மாணவிகளும் எழுத உள்ளனர்.

இந்த நிலையில்,நாளை தொடங்கவுள்ள 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 9 மணிக்கு வந்தால் போதும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக மாணவர்கள் காலை 8 மணிக்கே வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வுக்கு 9 மணிக்கு வந்தால் போதும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்கள் காலை 9.45மணிக்கு தேர்வு அறைக்குள் செல்ல வேண்டும். காலை 10மணிகு தேர்வுக்கான வினாத்தாள் விநியோகம் செய்யப்படும்.  காலை 10மணி முதல் 10.10 மணி வரை வினாத்தாளை படிக்க அனுமதி வழங்கப்படுகிறது. காலை 10.15மணி முதல் மதியம் 1.15மணி வரை 3மணி நேரம் தேர்வுக்கான நேரம்.

இதனிடையே,10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் விநியோகிக்க வேண்டு ம் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்பட்டால் மாற்று வசதி ஏற்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் பொதுத்தேர்வு மையங்களில் மின்வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே மின்பாதைகள் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.