சென்னை: பிளஸ்2 மதிப்பெண்கள் வெளியிட தயாராக உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
மத்தியஅரசு நீட் தேர்வு தேதி அறிவித்து ஆன்லைன் விண்ணப்பம் செய்யும் நடவடிக்கையை தொடங்கிவிட்டது. இதன் காரணமாக மாநில அரசுகள் பிளஸ்2 மதிப்பெண்கள் பட்டியலை விரைவில் அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பிளஸ்2 மாணாக்கர்களுக்கான தேர்வு முடிவுகள் தயாராக உள்ளது. அதை வெளியிடுவது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தினோம். அவர் அனுமதி அளித்தவுடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
மேலும், நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில், நீட் பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்படுகிறதா என்பது குறித்து நாளை (ஜூலை 16) நடைபெறும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். அதனைத்தொடர்ந்து பயிற்சியை வழங்குவது குறித்தும் முடிவெடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு வேண்டாம் என்பது எங்களின் முடிவாக உள்ளது. ஆனால், எதிர்பாராதவிதமாக நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது எனக்கு வருத்தமாக உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.