சென்னை மாநகரில் ஓட்டப் பயிற்சி செய்வோரிடையே Plogging என்ற வார்த்தை இப்போது மிகவும் பிரபலம்.
அதாவது ஓட்டப்பயிற்சி செய்யும் நபர்கள், தாங்கள் செல்லும் வழிகளில் இருக்கும் குப்பைகளை எடுத்து அப்புறப்படுத்துவது அல்லது ஓட்டப் பயிற்சி முடிந்தவுடன் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்துவது என்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்குத்தான் Plogging என்று பெயர். இதனை ஓட்டப்பயிற்சி செய்வோர் மட்டுமின்றி, சென்னை மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ள தூய்மைப் பணிக்கான தன்னார்வக் குழுக்களும் மேற்கொள்கின்றன.

இந்த Plogging செயல்பாட்டை சில உள்ளூர்வாசிகளும் பின்பற்றத் துவங்கியுள்ளனர். இந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதுடன், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள முடிவதால் இப்பணியில் ஈடுபட்டுள்ள பலரும் மகிழ்ச்சியாக உணர்வதாகக் கூறியுள்ளனர்.

Plogging என்பது 10.கி.மீ. தூரத்தை உள்ளடக்கியதாக உள்ளதாயும், இந்த தூரத்தை நிறைவுசெய்ய 90 நிமிடங்கள் முதல் 2 மணிநேரம் வரை ஆவதாக கூறப்படுகிறது. இதனுடன் சேர்த்து மாரத்தான் போட்டிகளும் நடத்தப்படுகிறது என்றும் தகவல்கள் கூறுகின்றன.