ட்விட்டரிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவ்வப்போது சமூகம் குறித்த தனது அறச்சீற்றங்களை வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.
நீட் குறித்து நான் என்ன செய்யவேண்டும் என்று கற்றோர் சொல்லட்டும் நான் வந்து நிற்கிறேன் என்று நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறினார்.
இதற்கிடையே… பொது விசயங்களுக்காக களத்தில் இறங்கிப் போராடி வரும் திரை இயக்குநர் வ.கவுதமன், கமல்ஹாசனின் ட்விட் மற்றும் பிக்பாஸ் கருத்துரைகளுக்கு பதில் அளித்து அளித்து பேட்டியளித்தார்.
அந்த பேட்டியில் வ.கவுதமன் தெரிவித்ததாவது:
“பிக்பாஸுக்கு என்னைத்தான் முதலில் கூப்பிட்டு வைத்துப் பேசினார்கள். எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறோம் என்றார்கள். எவ்வளவு வேண்டுமானாலும் கேளுங்கள் என்றார்கள்.
“நீங்கள் தமிழ் தேச அரசியல்.. தமிழ் ஈழ அரசியல் எதுவேண்டுமானாலும் பேசுங்கள்” என்றார்கள்.
ஆனால் நான், “போராடி சிறைக்குச் சென்றாலும் செல்வேனே தவிர, நீங்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு நீங்கள் சொல்லும் இடத்தில் வந்து என்னால் உட்கார முடியாது” என்றேன்.
அவர்களும் என்னை மிக கண்ணியமாக அணுகினார்கள், நான் மறுத்தவுடன் கண்ணியமாக விலகிவிட்டார்கள்.
ஆனால் இன்றைக்கு இருக்கும் சூழலில், கமல் அவர்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியில் உட்காரந்துகொண்டு “நீங்கள் கோபப்படுங்கள்..” என்று சொல்வதைவிட.. அவர் மீது மரியாதை உண்டு.. பெரும் கலைஞன். ஆனால் திரையிலேயே உட்காரந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கக் கூடாது.
நீங்க இறங்கி தரைக்கு வாருங்கள். எங்கள் கதிராமங்கலம், நெடுவாசலுக்கு வாருங்கள். வெறும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை மட்டும் குற்றம் சொல்லி பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை. இவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள தங்களது வசதி, பதவியைக் காப்பாற்றிக்கொள்ள கையேந்தி மத்திய அரசிடம் நிற்பவர்கள். இவர்களை குரங்குகளைப்போல ஆட்டிவிக்கும் குரங்காட்டிகள் இருக்கிறார்களே.. சிலர்.. அவர்களைக் கேள்வி கேட்டால் மட்டும்தான் உங்களது கேள்வி அர்த்தமுள்ளதாக அமையும்.
எங்களை சிதைக்கும் கதறவைக்கும் அழ வைக்கும் மத்திய அதிகார வர்க்கத்தை எதிர்த்து ஒரே ஒரு ட்விட்டர் போடுங்கள். ஒரு இடத்தில் வந்து நில்லுங்கள். நாங்களும் உங்கள் பக்கத்தில் வந்து நிற்கிறோம். நீங்களும் வந்து எங்கள் பக்கத்தில் நில்லுங்கள். எங்கள் உரிமைக்காக போராடுங்கள்.
மற்றபடி இங்கிருக்கும் அரசியல்வாதிகளை நீங்கள் மிரட்டுவது போல பதிவிடுவது எல்லாம் எங்களுக்கு எந்தவித நன்மையையும் பெற்றுத் தராது” என்று இயக்குநர் வ.கவுதமன் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோ: