சென்னை:
தலைமை எடுத்த முடிவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சுதர்சன் நாச்சியப்பனுக்கு கே.எஸ். அழகிரி ஆலோசனை கூறி உள்ளார்.
‘திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன., தமிழகம், புதுச்சேரியை சேர்நதுரு 10 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.
ஏற்கனவே புதுச்சேரிக்கு வேட்பாளராக வைத்திலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கு மட்டுமே முதல் கட்டமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சிவகங்கை தொகுதி வேட்பாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்த தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் பலர் முயற்சி செய்ததால், யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் நீடித்து வந்தது.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி வழங்குவது என்ற முடிவினை ராகுல் காந்தி எடுக்க உள்ளதாகவும், அடுத்த நாள்தான் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டும் என்று தெரிவித்த நிலையில், நேற்று நள்ளிரவேமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிவகங்கை தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இது காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன், சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்துள்ளது மக்களுக்கே அதிர்ச்சி அளிக் கிறது. தொகுதிக்கு எந்த நன்மையும் செய்யாமல் வெளிநாடுகளில் சொத்துகளை சேர்த்துள்ளது ப.சிதம்பரத்தின் குடும்பம்; ப.சிதம்பரத்தின் குடும்பத்தை மக்கள் வெறுக்கிறார்கள்‘ என்று சுதர்சன நாச்சியப்பன் கூறினார். இது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, சுதர்சன் நாச்சியப்பன் தகுதியானவர்தான், ஆனால் கட்சித் தலைமை முடிவை ஏற்பதே சரி என்று கூறி உள்ளர்.
காங்கிரசில் தகுதி வாய்ந்த தலைவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் என்று கூறியவர், இருக்கும் 9 தொகுதிகளில் ஒருசிலருக்கு மட்டுமே வாய்ப்புகள் தர முடிகிறது, இதனால் மற்றவர்களுக்கு வருத்தம் வருகிறது என்று கூறியவர், முன்பு இருமுறை என்னை வேட்பாளராக அறிவித்து பிறகு மாற்றிய வரலாறு உண்டு என்று தெரிவித்தார்.
சுதர்சன நாச்சியப்பன் தகுதியானவர் , ஆனால் கட்சி தலைமை எடுத்த முடிவை ஏற்க வேண்டும் என்றும், அவர் விமர்சிப்பது கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராகவா ? அல்லது கட்சித் தலைமையையா என்பதை யோசிக்க வேண்டும் என்றும், கட்சி தலைமை எடுத்த முடிவை எதிர்ப்பது சுதர்சன நாச்சியப்பனுக்கு அழகல்ல என்றும் தெரிவித்து உள்ளார்.