டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, புதிதாக தேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்துஉத்தரவிட்டனர்.

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு, செப்டம்பர்  12ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதில், 16 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.  இந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.  ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஒரு நீட் தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற்றது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது தெரிய வந்தது.

அந்த நிறுவனத்தில் படித்த  தானேஸ்வரி என்ற மாணவி, நீட் வினாத்தாளை ரூ.35 லட்சத்துக்கு வாங்கியதாகவும் , அதற்கான விடைகளை தானேஸ்வரிக்கு செல்போனில் அனுப்பியதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக, மாணவி உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதுபோல மேலும் பல வடமாநிலங்களில் நீட் வினாத்தாள் வெளியானதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.

இதையடுத்து, மாணாக்கர்கள் சார்பாக வழக்கறிஞர் மம்தா என்பர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில் , ‘இந்தாண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. போலீஸ் விசாரணையிலும் அது உறுதியாகி உள்ளது. தேர்வில் ஆள்மாறாட்டம் அதிகளவில் நடந்துள்ளது. மேலும், தேர்வு நடப்பதற்கு ஒரு நாள் முன்பாகவே வினாத்தாள் வெளியாகி உள்ளது. இதற்கு அதன் துறை சார்ந்த அதிகாரிகளே துணையாக இருந்துள்ளனர். இந்த முறைகேட்டுக்கு காரணமானவர்டனடியாக கண்டறிய வேண்டும். அதனால்  சிபிஐ விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும். மேலும், இந்தாண்டு நடந்த நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்து விட்டு, மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள்  எல் நாகேஸ்வர ராவ் மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வாதஙகளைத் தொடர்ந்து, மறுதேர்வு என்ற வேண்டுகோள் அற்பத்தனமானது என்று கூறியது. லட்சக்கணக்கான மக்கள் இந்தத் தேர்வுகளை எடுத்துள்ளனர்” என்று கூறியதுடன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.