சென்னை:

மிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல் பிளாஸ்டிக் தடை செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சென்னையில் அனுமதியின்றி பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்து வந்த  4 நிறுவனங் களுக்கு சீல் வைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து வணிக நிறுவனங்கள்  தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்த உயர்நீதி மன்றம்,  பிளாஸ்டிக் தடை விவகாரத்தில் தேவையில்லாமல் வணிகர்களை துன்புறுத்த வேண்டாம் எனவும் அரசு அதிகாரிகளுக்கு அறிவுரை கூறியது.

இதைத்தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பிளாஸ்டிக் நிறுவனங்களை மூட அரசு எச்சரிக்கை விடுத்தது. ஆனால், முறையாக அனுமதி பெறாமல் பல நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில்,  சென்னையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி, பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 4 நிறுவனங்களை மூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிறுவனங்களை உடனடியாக மூடி, சீல் வைக்குமாறும், அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை உடனே துண்டிக்குமாறும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி  உத்தர விட்டுள்ளது.