திருவண்ணாமலை: திருவண்ணாமலையில்  தீபத்திருவிழா தொடங்கி உள்ள நிலையில்,  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நெகிழியை பயன்படுத்தக்கூடாது என மாவட்ட  கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை  அருணாச்சலேஸ்வரர் கோவில்  கார்த்திகை  மாத தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்ரத 4ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தீபத்திருவிழா  17ந்தேதிவரை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக,  டிசம்பர் 10 ஆம் தேதி திருத்தேர் உலாவும்,  டிசம்பர் 13ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அன்று மாலை மகர தீபமும் ஏற்றப்படுகிறது.

இந்த திருவிழாவை காண தினசரி பல ஆயிரம் பக்தர்கள் திருவண்ணாமலை வருகை தந்து அருணாச்சலேஸ்வரரை தரிசித்து செல்கின்றனர்.  மகா தீபம் ஏற்றப்படும் அன்று சுமார் 35 லட்சம் முதல் 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

இந்த நிலையில்,  காா்த்திகை தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்க விண்ணப்பித்த நபருக்கு, அனுமதி டோக்கனை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  காா்த்திகை தீபத் திருவிழா, டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அன்னதானம் வழங்க வேண்டி விண்ணப்பித்தவா்களுக்கு, மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத்துறை சாா்பில் அனுமதி டோக்கன்கள் வழங்கும் நிகழ்ச்சி  தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தலைமை வகித்தாா். தமிழக உணவு பாதுகாப்புத் துறையின் கூடுதல் ஆணையா் தேவபிரசாத், உணவு பாதுகாப்புத் துறையின் திருவண்ணாமலை மாவட்ட நியமன அலுவலா் ஏ.ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.  மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அன்னதானம் வழங்க விண்ணப்பித்த நபா்களுக்கு அனுமதி டோக்கன்களை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர்,  அன்னதானம் வழங்குவோா் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழியை பயன்படுத்துவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். மீறி பயன்படுத்துவோா் மீது அபராதம் விதிக்கப்படும். தொடா்ந்து அன்னதானம் வழங்குவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என்றாா்.

அன்னதானம் வழங்குவோா் வாழை இலை, பாக்கு மட்டைத் தட்டு, மந்தாரை இலை ஆகியவற்றை பயன்படுத்தலாம். உணவு சமைக்க தூய்மையான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். தூய்மையான, தரமான பொருள்களை பயன்படுத்தி உணவு சமைத்து வழங்க வேண்டும்.

நிகழ்ச்சியில், நலப் பணிகள் இணை இயக்குநா் பிரகாஷ் மற்றும் மருத்துவா்கள், அன்னதானம் வழங்குவோா், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.