சென்னை:

மிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய சூழ்நிலையில் அரசின் நெகிழி (பிளாஸ்டிக்)  தடையானைக்கு தடைவிதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், அரசு அதிகாரிகளுக்கு, வணிகர்களை பிளாஸ்டிக் தடை காரணமாக துன்புறுத்த வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கி உள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு மீதான கடந்த விசாரணையின்போது,  தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது மனுக்களை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது, பொருட்களை பேக்கிங் செய்யும் பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டுமாவது விலக்கு அளிக்குமாறு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். மேலும், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்க ளுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம்,  பிளாஸ்டிக் தடை அரசாணையை முறையாகப் பின்பற்றுமாறு வணிகர்களுக்கு உத்தரவிட்டது.

மேலும்,  14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு விதித்த தடையை நீக்க மறுத்த நீதிமன்றம்,  பிளாஸ்டிக் தடை விவகாரத்தில் தேவையில்லாமல் வணிகர்களை துன்புறுத்த வேண்டாம் எனவும் அரசு அதிகாரிகளுக்கு அறிவுரை கூறியது. தொடர்ந்து வழக்கின் விசாரணை வரும் 23ந்தேதி ஒத்தி வைக்கப்பட்டது.