டெல்லி:
தலைநகர் டெல்லியில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில், அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு, வேறு மருத்துவமனைக்கு மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14ந்தேதி) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், டெல்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு பாசிட்டிவ் என தெரிய வந்ததும் உடனடியாக டெல்லி ராஜிவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவரால் மூச்சு விட சிரமப்பட்ட நிலையில், நிமோனியா காய்ச்சல் பாதிப்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால், அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிளாஸ்மா தெரபி அளிக்கும் வகையில், அவரை தெற்கு டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையின் சாக்கெட் வசதிக்கு மாற்றப்படுவார் என்று தலைநகர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.