செடிகளுக்கும் அழுகை வரும் என்று இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தங்கள் ஆய்வுக் கூடத்தில் வளர்க்கப்பட்டு வரும் செல்கள் அருகில் வைக்கப்பட்ட மைக்ரோபோன்கள் மூலம் இந்த அழுகை சத்தத்தை துல்லியமாக பதிவு செய்துள்ள இவர்கள் செடிகள் எழுப்பும் இந்த ஒலியை எலிகள், வௌவ்வால்கள் மற்றும் அந்தப்பூச்சி வகையைச் சார்ந்த உயிரினங்களால் கேட்க முடியும் என்றும் அனுமானித்துள்ளனர்.

இது தொடர்பாக ‘செல்’ என்ற உயிரியல் ஆய்வு இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்ணீர் இன்றி தவிக்கும் செடிகளும் காயம்பட்ட செடிகளும் ஒரு மணி நேரத்திற்கு 35 ஒலிகள் எழுப்புவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

20 முதல் 100 கிலோ ஹெர்ட்ஸ் அளவிலான அல்ட்ரா சோனிக் ஒலியை எழுப்புவதால் இது யாருடைய காதுகளுக்கும் கேட்க வாய்ப்பில்லை என்று தங்களது ஆய்வின் மூலம் அறிந்துள்ளனர்.

இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹடானி தலைமையிலான ஆய்வுக் குழு நடத்திய இந்த சோதனையில், செடிகள் தங்களுக்கு தேவையான தண்ணீரை உறிஞ்சும் அல்லது செடிகளின் பல்வேறு பாகங்களுக்கு தண்ணீரை எடுத்துச் செல்லும் நுண்ணிய குழாய் போன்ற அமைப்பில் வறட்சி நேரங்களில் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் போது காற்று அடைத்துக் கொள்வதால் இதுபோன்ற ஒலி எழ வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுதொடர்பான ஆய்வு நடைபெற்று வருவதாகவும் தங்களின் இந்த ஆய்வின் முடிவு தாவரங்கள் குறித்த தங்களின் ஆய்வில் மேலும் பல தகவல்களை அறிய உறுதுணையாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.