திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம், பெருகவாழ்ந்தான். இந்த கிராமத்து இளைஞர்கள் சேர்ந்து, “வேர்கள்” என்ற அமைப்பை உருவாக்கி, பொதுப்பணிகள் செய்து வருகிறார்கள்.
இவர்களது முக்கிய பணி, வீட்டுக்கு வீடு மரக்கன்றுகளை அளிப்பது…
அது மட்டுமல்ல, சரியாக மரக்கன்றுகளை பராமரி்ப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் மாதாமாதம் பணப்பரிசும் அளிப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
முதல் பரிசு 3000, இரண்டாம் பரிசு 2000 மூன்றாம் பரிசு 1000 ரூபாய்.
இந்த வித்தியாசமான பரிசுத்திட்டத்துக்குக் காரணமானவர். இதே கிராமத்தைச் சேர்ந்த , க.தமிழன் .
இந்த மரம் வளரப்பு பரிசுத்திட்டம் குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
“மரம் தருவதோ நடுவதோ பெரிய விசயமல்ல.. கடந்த இருபதாண்டு செய்தித்தாள்களை புரட்டிப் பார்த்தால், மரம் நடும் விழாக்களில் நட்ட மரங்கள் மட்டும் பல கோடி மரங்களைத் தாண்டும்.. அதெல்லாம் வளர்ந்திருந்தா, இன்னைக்கு தமிழ்நாடு பசுமைக்காடா மாறியிருக்கும்.. மரம் நடும் பணியில் காட்டும் முனைப்பு அதனை பராமரித்தலில் இல்லை.
கடந்த மூன்று தினங்களில் கிட்டத்தட்ட 5000 மரக்கன்றுகளை வீடுதோறும் வழங்கியுள்ளோம்.. இதோடு நின்றுவிடாமல், அதனை 5 வருடங்கள் அந்தந்த வீட்டினரே பராமரிப்பதை ஊக்குவிக்கும் விதத்தில் கீழ்க்காணும் திட்டத்தினை செயல்படுத்த உள்ளோம்.
1) மரக்கன்றுகள் வழங்கப்பட்ட ஒவ்வொரு வீடும் ஒரு எண்ணால் (Unique number) அடையாளப்படுத்தப்படும்.
2 ) ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையும் குலுக்கல் முறையில் மூன்று எண்கள் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்படும்.
3) முதல் பரிசாக 3000 ரூபாயும் , இரண்டாம் பரிசாக 2000 ரூபாயும் மற்றும் மூன்றாம் பரிசாக 1000 ரூபாயும் 5 வருடங்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும்..
விதிமுறைகள்:
1) தேர்ந்தெடுக்கப்பட்ட வீடுகளில் 5 மரக்கன்றுகளையும் சரியாக பராமரித்து இருக்க வேண்டும்.
2) அவர்கள் வீட்டில் சீமைக்கருவேல மரங்கள் முற்றாக அழிப்பட்டு இருக்க வேண்டும்.
3) கொடுக்கப்பட்ட 5 மரக்கன்றுகளில், குறைந்த பட்சம் இரண்டு மரக்கன்றுகள் வீட்டிற்கு வெளியே நட்டிருக்க வேண்டும்.
4) பரிசுத் தொகை அந்தந்த வீட்டிலுள்ள குடும்பத் தலைவியிடம் மட்டுமே கொடுக்கப்படும்..
தேர்ந்தெடுக்கப்பட்ட வீடுகளுக்கு வேர்கள் இளையோர் அமைப்பினர் சென்று பார்வையிட்டு, மேற்சொன்ன விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால் மட்டுமே அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
இதன்மூலம் 5 வருடங்கள் இந்த மரக்கன்றுகளை அந்தந்த வீட்டு மக்கள் சரியாக பராமரிப்பார்கள் என்ற எண்ணத்தில் செய்கிறோம்.
ஊராரின் ஒத்துழைப்புடன் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையில் ‘வேர்கள்’ இளையோர் அமைப்பு வேர்களை பரவவிட்டிருக்கிறது.” என்று தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் க.தமிழன்.
இதே போல, வாய்ப்புள்ளவர்கள் தங்களது பகுதியில் மரக்கன்றுகளையும் அளித்து, ஊக்கப்படுத்த தங்களால் இயன்ற பரிசுகளையும் அளிக்கலாமே!