ஜெயலலிதா வாழ்ந்த  போயஸ்கார்டன் வீட்டுக்கு மிக அதிக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, முக. ஸ்டாலினை தொடர்ந்து பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசையும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைமையகமான சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “கருப்பு பணம் எங்கெல்லாம்  இருக்கிறது என்று மத்திய அரசுக்கு சந்தேகம் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் சோதனை நடைபெறுகிறது. அந்த அடிப்படையில்தான் சேகர் ரெட்டி மற்றும் ராம் மோகன் ராவ் வீடுகளில் சோதனை நடநடந்தது. அதில் கோடிக்கணக்கில் பணம்,மற்றும் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.  இது வருமனவரிதுறையின் இயல்பான நடவடிக்கை, இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது” என்று தெரிவித்தார்.
மேலும், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டிற்கு இவ்வளவு போலீஸ் பாதுகாப்பு தேவையா என்ற கேள்வி எழுகிறது. ஜெயலலிதா முதலமைச்சர்  பொறுப்பில் இருந்தபோது நிலவிய சூழல் நிலை வேறு. இப்போது சட்டப்படி அரசு உயர் பொறுப்பு வகிக்கும் யாரும் அந்த வீட்டில் இல்லாதபோது, இவ்வளவு போலீசார் அங்கு பாதுகாப்புக்கு தேவையில்லை” என்றார்.