கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்ட சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ. 52 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருவான்மியூரில் இருந்து உத்தண்டி செல்லும் சாலையில் ஒரு நாளைக்கு 1.2 லட்சம் வாகனங்கள் செல்கின்றன.

நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வரும் இந்த சாலையை அகலப்படுத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டது.

தற்போது 90 அடி அகலம் கொண்ட இந்த சாலையை திருவான்மியூர் முதல் அக்கரை வரை 10.5 கி.மீ. தூரத்திற்கு 104 அடியாக அகலப்படுத்தும் திட்டம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தப்பட்டது.

ஆனால் இந்தப் பணி இன்னும் முடிவடையாமல் மந்தகதியில் நடைபெற்று வருகிறது.

கடந்த ஓராண்டாக சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்தச் சாலையின் நடுவே உயர்மட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருவான்மியூர் ரயில் நிலையம் முதல் கொட்டிவாக்கம் வரை 2.2 கி.மீ. தூரத்திற்கு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

தற்போது இதனையும் இணைத்து திருவான்மியூர் ரயில் நிலையம் முதல் உத்தண்டி வரை 16 கி.மீ. தூரத்திற்கு உயர்மட்ட சாலை அமைக்க திட்ட அறிக்கை தயாராகிறது.

இந்த உயர்மட்ட சாலையில் அக்கரை சந்திப்பில் பழைய மகாபலிபுரம் சாலை செல்லும் வகையில் ரவுண்டான அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் செயல்படுத்தப்படும் போது திருவான்மியூர் – உத்தண்டிக்கு தற்போது 45 நிமிடமாக இருக்கும் பயண நேரம் 10 நிமிடமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.