டெல்லி:

உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. இந்தாண்டு மாணவர்கள், இளைஞர்கள் என தமிழக மக்கள் போராட்டம் நடத்தியதால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக சட்டசபையில் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது.

இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பீட்டாவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வலிறுத்தப்பட்டது.

தமிழகத்தை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் எருமைகள் கலந்து கொள்ளும் கம்பளா விளையாட்டுக்கு அம்மாநில அரசும் சட்டம் கொண்டு வந்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு சட்டம், கர்நாடகாவின் கம்பளா சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக பீட்டா தெரிவித்துள்ளது. இருமாநில சட்டங்களையும் தனித்தனியாக அல்லது இணைந்து எதிர்ப்பது என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை என பீட்டா தெரிவித்து உள்ளது.

பீட்டா இந்தியாவின் கால்நடை விவகார இயக்குநர் மணிலால் வாலியாதே கூறுகையில், ‘‘இரு மாநில அரசுக்களும் கொண்டுவந்து உள்ள சட்டத்தை நாங்கள் உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்போம். இதனை அடுத்த சில நாட்களில் செய்வோம். இரு மாநில அரசுக்களின் சட்டங்களை தனித்தனியாக அல்லது கூட்டாக எதிர்ப்பதா என்பது குறித்து வழக்கறிஞர்களிடம் ஆலோசனை செய்து வருகிறோம்,” என்றார்.

தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விலங்குகள் நல வாரியம் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பாக கடந்த ஜனவரி 31-ம் தேதி தடை விதிக்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.