பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோவில், சிவகங்கை மாவட்டம், பிரான்மலையில் அமைந்துள்ளது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற வகையில் பெருமைக்குரிய கோவில்கள் பல உண்டு. அவற்றுள் ஒன்று திருக்கொடுங்குன்றம் என்றழைக்கப்படும் பிரான்மலை ஸ்ரீ கொடுங்குன்றநாதர் ஆலயமாகும். ஒருசமயம் வாயு, ஆதிசேஷனுக்கிடையே தங்களில் யார் “பலசாலி” என்ற சர்ச்சை எழுந்தது. இருவரும் தங்களுக்குள் போட்டி வைத்துக்கொண்டனர். ஆதிசேஷன் மேருமலையைச் சுற்றிக்கொள்ள வேண்டும், அதை வாயு பகவான் தனது பலத்தால் பெயர்க்க வேண்டும் என்பது போட்டி. ஆதிசேஷன், மலையை இறுகப் பற்றிக்கொண்டார். வாயு அதைப் பெயர்க்க முயன்றார். காற்று பலமாக வீசியதில், மேருமலையிலிருந்து சில துண்டுகள் பெயர்ந்து விழுந்தன. அவ்வாறு விழுந்த ஒரு துண்டே, இங்கே மலையாக திருக்கொடுங்குன்றம் என்ற பெயரில் உள்ளது. கடையேழு வள்ளல்களுள் ஒருவனும், முல்லைக்குத் தேர் ஈந்தவனுமான பாரி வள்ளல் ஆட்சி செய்த இடம் இப்பகுதி. அக்காலத்தில் இப்பகுதி பறம்பு நாடு என்றும் இம்மலை பறம்பு மலை என்றும் அழைக்கப்பட்டது. இன்று காலப்போக்கில் மருவி “பிரான்மலை” ஆகிவிட்டது.

மலை அடிவாரம், மலையின் நடுப்பகுதி, மலை உச்சி ஆகிய மூன்று நிலைகளிலும் சந்நிதிகள் கொண்டு காணப்படும் ஒரே ஆலயம் பிரான்மலை கொடுங்குன்றநாதர் ஆலயம் தான். மலை உச்சியில் மங்கைபாகர் என்னும் பெயரில் ஈசன் திருமணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். மங்கைபாகருக்கு உமாமகேஸ்வரர் என்றும் ஒரு பெயருண்டு. இறைவி தேனாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறாள். சந்தனம், புனுகு தைலக் காப்பிட்டு, அபிஷேகம், ஆராதனை செய்து இவரை வழிபட்டால் எண்ணியது நிறைவேறும், திருமணத் தடைகள் அகலும் என்பது நம்பிக்கை.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது இரு பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும், இரு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். வழக்கமாக முருகன் சத்திதி எதிரில் இருக்கும் மயில் வாகனத்திற்கு பதிலாக இங்கு யானை உள்ளது. முருகன் சந்நிதி எதிரில் 18 துவாரங்களுடன் கூடிய மதில் உள்ளது. இந்த மதில் வழியாகத்தான் யானையைப் பார்க்க முடியும்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். (ஐப்பசி முதல் பங்குனி வரையில்), சிவன் மீது சூரிய ஒளி விழுகிறது. இவ்வாறு சூரிய ஒளி விழுவதைக் காண்பது அபூர்வம். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பாதாளம், பூமி, மலை என மூன்றடுக்கு கொண்டதாக இக்கோவில் அமைந்துள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 195 வது தேவாரத்தலம் ஆகும்.

கருத்து வேறுபாடுள்ள தம்பதியர்கள் இங்கு வேண்டிக் கொள்ள ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கை. ஜாதகத்தில் சுக்கிரன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள், இங்கு அம்பிகையிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.