ஜெய்ப்பூர்
ஜெய்ப்பூர் – டில்லி விமான ஓட்டி தனக்கு வேலை நேரம் முடிந்ததால் விமானத்தை செலுத்த முடியாது எனக் கூறியதால் பயணிகள் அவதியுற்றனர்
நேற்று ஜெய்ப்பூரில் இருந்து டில்லி செல்ல வேண்டிய விமானம் டில்லியில் இருந்து வந்து பிறகு டில்லிக்கு திரும்பிச் செல்ல வேண்டும். ஆனால் டில்லியில் இருந்து வரும் விமானம் நேற்று இரவு வர வேண்டியதற்கு பதில் இன்று விடியற்காலை 1.30 மணிக்கு வந்தது. அதனால் தனது வேலை நேரம் முடிந்து விட்டதாகக் கூறி விமான ஓட்டி விமானத்தை ஓட்ட மறுத்து விட்டார். இந்த விமானம் இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நடத்தும் அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் விமானம் ஆகும்.
இது குறித்து, ஜெய்ப்பூர் சங்கனேர் விமான நிலைய இயக்குனர் பல்ஹாரா, “சிவில் விமானத்துறை இயக்ககத்து விதிகளின்படி ஒரு விமான ஓட்டி தனது வேலை நேரத்தை தாண்டியும் பணி புரிவது பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது ஆகும். எனவே விமான ஓட்டி விமானத்தை இயக்க மறுத்து விட்டார். பயணிகளில் சிலர் சாலைவழியாக டில்லிக்கு அனுப்பப்பட்டனர். சிலர் மாற்று விமானங்களில் அனுப்பப் பட்டனர். மற்றவர்களுக்கு ஜெய்ப்பூரில் உள்ள ஓட்டல்களில் தங்க வசதி செய்து தரப்பட்டது” எனக் கூறி உள்ளார்.