திருமலை:
திருப்பதி ஏழுமலையானை ஜூன் 11 முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா மூடப்பட்டிருந்த வழிப்பாட்டுத் தலங்கள் 8ந்தேதிக்கு பிறகு திறக்கலாம் என மத்தியஅரசு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, பல்வேறு கட்டுப்பாடுகள், முக்கவசம், சமுக இடைவெளி போன்றவற்றை கடைபிடித்து கோவில்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஜூன் 11ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து திருமலை அன்னமய்ய பவனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தேவஸ்தானம் அதிகாரி கூறியதாவது,
மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்படி வரும் ஜூன் 8ம் தேதி முதல் ஏழுமலையான் தரிசனம் திருமலையில் தொடங்கப்பட உள்ளது.
ஜூன் 8 மற்றும் 9 தேதிகளில் தேவஸ்தான ஊழியர்களும், ஜூன் 10ம் தேதி திருமலையில் வசிக்கும் உள்ளூர் வாசிகளுக்கும் தரிசன அனுமதி வழங்கப்பட உள்ளது.
அதன்பின் ஜூன் 11ம் தேதி முதல் இதர மாநிலங்களிலிருந்து வரும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் தொடங்கப்பட உள்ளது. திருமலையில் தினசரி 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசனம்.
காலை 6.30 மணிமுதல் மாலை 7 மணிவரை ஒரு மணி நேரத்திற்கு 500 பேர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
முதல் ஒரு மணி நேரம் வி.ஐ.பி தரிசனமும், அதற்கு பின் சர்வ தரிசனமும் தொடங்கப்பட உள்ளது.
3 ஆயிரம் பேருக்கு ஆன்லைன் மூலமாகவும், அலிபிரியில் உள்ள டிக்கெட் கவுண்டர் மூலம் 3 ஆயிரம் பேருக்கு நேரடி தரிசன டிக்கெட் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அலிபிரி நடைபாதை மார்கத்தில் காலை 5 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். ஸ்ரீவாரிமெட்டு மார்கம் முற்றிலும் மூடப்பட்டுள்ளது.
மலைபாதைகள் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் 10 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் தரிசன அனுமதி இல்லை.
நாட்டில் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து பக்தர்கள் தயவு செய்து ஏழுமலையான் தரிசனத்திற்கு வரவேண்டாம்
ஆன்லைன் முன்பதிவு வரும் ஜூன் 8ம் தேதி முதல் தொடங்க உள்ளது.
ஜூன் மாத தரிசன கோட்டா தேவஸ்தான இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளது.
நேரடியாக திருப்பதிக்கு வந்து டிக்கெட் பெற விரும்பும் பக்தர்கள் ஒருநாள் முன் அலிபிரியில் தரிசன அனுமதி பெற வேண்டும்.
வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் தங்கள் மாநில அரசிடமிருந்து உரிய அனுமதி பெற்று வரவேண்டும்.
வி.ஐ.பிக்களுக்கு மட்டுமே வி.ஐ.பி தரிசனம் வழங்கப்படும்.
ஏழுமலையான் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் அலிபிரி சோதனை சாவடியில் முழுமையாக தெர்மல் ஸ்கேனிங் செய்த பின் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். அதற்காக அலிபிரியில் சோதனை மையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு 200 பக்தர்களுக்கு ராண்டம் சோதனை செய்யும் விதம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் மட்டுமல்லாமல் பக்தர்கள் வரும் வாகனங்கள், அவர்களின் உடைமைகள் உள்ளிட்டவையும் சானிடேஷன் செய்யப்படும்.
திருமலைக்கு வரும் பக்தர்கள் அறைகள் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற்றவர்கள் தங்கள் அறைகளை ஆன்லைன் மூலமாகவே முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஒரு அறையில் 2 பேர் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவர். திருமலையில் ஒருநாள் தங்குவதற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
ஒருநாள் ஒற்றை எண் கொண்ட அறைகளும், மறுநாள் இரட்டை எண் கொண்ட அறைகளும் பக்தர்கள் தங்க வழங்கப்படும்.
பக்தர்கள் தரிசனத்திற்குச் செல்ல 2 வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முககவசம் அணிந்து கைகளை சானிடைசரால் சுத்தம் செய்த பின் பக்தர்கள் தரிசன வரிசையில் செல்ல அனுமதிக்கப்படுவர்.
தரிசன வரிசையிலும் பக்தர்கள் தெர்மல் ஸ்கேனிங் செய்யும் விதம் மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் செல்லும் தரிசன வரிசைகள், காத்திருக்கும் அறைகள் உள்ளிட்டவை 2 மணிநேரத்திற்கு ஒருமுறை சானிடைஸ் செய்யப்பம்.
பக்தர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் தேவஸ்தான ஊழியர்களுக்கு பிபி கிட் வழங்கப்படும்.
தரிசன வரிசையில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதம் கோடுகள் வரையப்பட்டுள்ளது.
ஏழுமலையான் தரிசனம் முடிந்த பின் தீர்த்தம், சடாரி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள உப ஆலயங்கள் தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உண்டியல் காணிக்கை செலுத்தும் இடங்களில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கோயிலை விட்டு வெளியில் வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவது குறித்து ஆந்திர அரசிடம் தேவஸ்தானம் அனுமதி கோரியுள்ளது.
அனுமதி கிடைத்த பின் சுகாதாரமான முறையில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும்.
திருமலைக்கு வரும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து 5 மொழிகளில் அறிவிப்புகள் வெளியிடப்படும்.
தரிசனம் முடித்த பக்தர்கள் லட்டு கவுண்டருக்குச் சென்று லட்டு பிரசாதம் பெறுவர். அங்கும் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதம் கோடுகள் வரையப்பட்டுள்ளது.
அன்னதான கூடத்தில் சமூக இடைவெளியுடன் பக்தர்களுக்கு சுகாதாரமான முறையில் அன்னதானம் வழங்கப்படும்.
காத்திருப்பு அறையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு அவர்களின் காத்திருப்பு நேரத்தைக் கணக்கிட்டு அன்னதானம் வழங்குவது குறித்து முடிவு மேற்கொள்ளப்படும்.
பக்தர்கள் தங்கள் காலனிகளை தாங்களே கையாலும் விதம் பல இடங்களில் காலனி அறைகள் நிறுவப்பட்டுள்ளது.
முடிக்காணிக்கை செலுத்தும் இடத்திலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கும் விதம் கோடுகள் வரையப்பட்டுள்ளது.
திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்திற்கு சொந்தமான வாடகை அறை வளாகங்களிலும் திருமலையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படும்.
திருப்பதி மற்றும் இதர பகுதிகளில் உள்ள தேவஸ்தான கோயில்களிலும் பக்தர்களைத் தரிசனத்திற்கு அனுமதிக்க டோக்கன் முறை அமல்படுத்தப்பட உள்ளது.
பக்தர்கள் மத்திய, மாநில அரசுகளின் அறிவுரைகளைக் கடைப்பிடித்து, திருமலைக்கு வந்து ஏழுமலையானை மன நிறைவுடன் தரிசனம் செய்து செல்ல வேண்டும்’.
இவ்வாறு அவர் கூறினார்.