சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட உள்ளது.  ஏற்கனவே முதல்கட்டமாக 17 இடங்களில் நடத்தப்பட்ட நிலையில், இன்று 2வது கட்ட சோதனை அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் வந்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆய்வு செய்து வருகிறார்.

தமிழகத்தில் கடந்  2ந்தேதி சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, நெல்லை  உள்பட  11 இடங்களில் முதல்கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.  இந்த நிலையில்,  இன்று ( 8ந்தேதி) 2வது கட்ட தடுப்பூசி ஒத்திவை  தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இலவச கொரோனோ தடுப்பூசி செலுத்துவதற்காக 8881 மையம் மற்றும் 6 லட்சம் முன்கள பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். முதற்கட்டமாக தமிழகத்தில்  6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், ஒரு மையத்தில் நாளொன்றுக்கு 100 பேருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது/ 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை மற்றும், தடுப்பூசி போடுவதற்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் வகையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தமிழகம் வந்துள்ளார். அவர் இன்று காலை  சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு விஜயம் செய்து, தடுப்பூசி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

அவருடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனை டீன் உள்பட அதிகாரிகள் இருந்தனர். தொடர்ந்து ஹர்ஷவர்தன் தடுப்பூசிகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள குடோனை பார்வையிட உள்ளார். பின்னர் பிற்பகல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேச்சுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.