சென்னை:
தமிழகத்தில் உள்ள 384 முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்பை, பட்டப்படிப்பாக மாற்றி, இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 124 முதுநிலை பட்டப்படிப்பு இடங்களையும் அதிகரித்து ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
கடந்த 2018-19- ம் ஆண்டில் முதுநிலை பட்டப்படிப்புக்கான இடங்கள் 1,250 இருந்தன. 1919-20 ம் ஆண்டுக்கு 1,758 இடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
நாட்டிலேயே அதிக அளவு முதுநிலை பட்டப்படிப்புக்கான இடங்கள், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே உள்ளன.
முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்களை இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் அரசு சமர்ப்பித்துவிட்டது. அந்த இடங்களை பட்டப்படிப்புகளாக மாற்றி அகில இந்திய மருத்துவக் கவுன்சில் பிறப்பிக்கும் உத்தரவுக்காக தமிழக அரசு காத்திருக்கிறது.
மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ கூறும்போது, 384 முதுநிலை டிப்ளமோ படிப்புகளை பட்டப்படிப்புகளாக மாற்றி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான இடம் சென்னை மருத்துவக் கல்லூரியில் அதிகபட்சமாக 433-ஆக உயர்ந்துள்ளது என்றார்.