வாஷிங்டன்

மெரிக்க நிறுவனமான பிஃபிசர் தனது கொரோனா சிகிச்சைக்கான மாத்திரையின் மனிதர்கள் மீதான சோதனையைத் தொடங்கி உள்ளது.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டோருக்கு உடனடி சிகிச்சைக்கான மருந்துகள் தற்போது மிகவும் குறைவாகவே உள்ளன.   குறிப்பாக மற்ற நோய்க்கான மருந்துகள் மட்டுமே சோதனை முறையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது.   அமெரிக்காவில் எலி லில்லி மற்றும் ரிஜெனரான் ஆகிய நிறுவனங்கள் கண்டுபிடித்த ஆண்டி பாடி சிகிச்சை முறை அனுமதிக்கப்பட்ட போதிலும் அதில் கடும் அபாயம் உள்ளது தெரிய வந்துள்ளது

இதையொட்டி அந்த சிகிச்சை முறைக்கு மக்களிடையே ஆதரவு இல்லாத நிலை ஏற்பட்டது.  ஒரு சில மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து அளிக்கப்பட்ட போதிலும் அது ஆரம்பக் கால கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை.  எனவே இதற்கான மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்க மருந்து நிறுவனமான பிஃபிஸர் நிறுவனம் ஈடுபட்டது.

ஆரம்பக் கட்டத்தில் உள்ள கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மாத்திரை வடிவிலான மருந்தை இந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.  இந்த மருந்து ஏற்கனவே மருத்துவ மற்றும் சோதனைக்கூடத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளது.  தற்போது இந்த மருந்து மனிதர்கள் மீதான சோதனை தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிஃபிசர் நிறுவன விஞ்ஞான அதிகாரி மிகேல் டால்ஸ்டன், “கொரொனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் அதை ஆரம்பத்திலேயே குணப்படுத்துவது தற்போது மிகவும் அவசியமாகி உள்ளது.   இதன் மூலம் கொரோனா மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்.    எனவே எங்கள் குழு மாத்திரை வடிவிலான மருந்து ஒன்றை கண்டு பிடித்து தற்போது அதை மனிதர்கள் மீது சோதனை நடத்தத் தொடங்கி உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இந்த முதல் கட்ட சோதனை வெற்றி அடைந்தால் பிஃபிசர் நிறுவனம் இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் இரண்டாம் மற்றும் மூன்றா ம் கட்ட சோதனையைத் தொடங்க உள்ளது.   இந்த சோதனைகளுக்குப் பிறகு இந்த வருட இறுதிக்குள் இந்த மருந்துக்கு அமெரிக்க உணவு மற்றும், மருந்து நிர்வாகம் அவசர கால ஒப்புதல் அளிக்கலாம் என நிறுவனம் கூறி உள்ளது.