2000 ரூபாய் நோட்டுகள் பெட்ரோல் பங்குகளில் அதிகளவு குவிவதால் தங்களுக்குத் தேவையான அளவு 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வழங்க வேண்டும் என்று பெட்ரோல் பம்ப் டீலர்கள் ஆர்.பி.ஐ.-யிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளொன்றுக்கு அதிகபட்சமாக 20,000 ரூபாய்க்கு மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றித் தரமுடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் அகில இந்திய பெட்ரோலிய டீலர்கள் சங்கத்தின் தலைவர் அஜய் பன்சால் இவ்வாறு கோரியுள்ளார்.
இதுகுறித்து அகில இந்திய பெட்ரோலிய டீலர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது :
செப்டம்பர் 30 ம் தேதிக்கு பின் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது அதுவரை புழக்கத்தில் உள்ள நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று ஆர்.பி.ஐ. அறிவிப்பு வெளியிட்டதுமுதல் பெட்ரோல் பம்புகளில் 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்புவது அதிகரித்துள்ளது.
தினசரி 40 சதவீத விற்பனை டிஜிட்டல் பரிவர்த்தனையாக இருந்த நிலையில் இந்த அறிவிப்புக்குப் பிறகு அது நாளொன்றுக்கு 10 சதவீதமாக சரிந்துள்ளது.
பெட்ரோல் பங்குகளில் பணப் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது அதில் 90 சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகளாக உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
விற்பனைப் போக்கில் இத்தகைய மாற்றம் வருமான வரி அதிகாரிகளுடன் சிக்கலுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவிர, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சந்தித்து வரும் இந்த சிக்கலைத் தீர்க்க பங்க் உரிமையாளர்களுக்கு தேவையான அளவு 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர ரிசர்வ் வங்கி வகை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.