சென்னை: நாடு முழுவதும் இன்று 99வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் செஞ்சுரியை நெருங்கி உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல்  விலை தினசரி மாற்றம் செய்யும் முறையை மோடி தலைமையிலான பாஜக அரசு அமல் படுத்தியது.   இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உச்சத்துக்கு சென்றது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மிதமான விலையில் இருந்தாலும், குறைந்தாலும், எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத நிலையே தொடர்ந்து வருகிறது. இது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக, நாட்டில் விலைவாசியும் கடுமையாக ஏறி உள்ளது. இது சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்து வருகிறது. இதையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு,  பெட்ரோல் டீசல் விலை மீதான வரியில் மத்தியஅரசு மாற்றம் செய்தது. அதன்படி,  பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும் டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் குறைத்தது.

இதையடுத்து, பெட்ரோல் டீசல் விலை மாற்றமின்றி தொடர்ந்து வருகிறது. இன்று 99வது நாளாக  தொடர்ந்து  விலையில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது. நாளை 100நாளை எட்டுகிறது. இது வாகன ஓட்டிகளை நிம்மதியடையச் செய்துள்ளது.