சென்னை: சென்னை ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், என்.ஐ.ஏ விசாரணை நடத்துகிறது. இதற்கான வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த அக்டோபர் 25ஆம் தேதி பிரபல ரவுடி கருக்கா வினோத் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசினான். இதை கண்ட காவலர்கள் அவரை மக்கி வைத்து செய்தனர். அவரிடம் இருந்த மூன்று பெட்ரோல் குண்டுகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் விசாரணையில், அவர் பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பது தெரிய வந்தது.
இந்த குண்டு வீச்சுக்கு நீட் தேர்வுதான் காரணம் என கருக்கா வினோத் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் என்ன, பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்று கிண்டி காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, கருக்கா வினோத்தை சென்னை காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்த்துள்ளது.
இந்த சம்பவங்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ள நிலையில், ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக, என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்ற வேண்டுமென பாஜக உள்பட எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. மேலும் கவர்னர் மாளிகையும் என்ஐஏ விசாரணை நடத்த வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியது.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் தற்போது என்.ஐ.ஏ (N.I.A) விசாரணையைத் தொடங்க உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் இன்று உத்தரவு பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே கிண்டி போலீசார் நடத்திய விசாரணை அறிக்கை, முதல் தகவல் அறிக்கை, கருக்கா வினோத் கொடுத்த வாக்குமூலம் ஆகியவற்றை என்.ஐ.ஏ அதிகாரிகள் திரட்டி உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க முடியாத நிலையில், கிண்டி போலீசார் என்ன மாதிரியான விசாரணையை நடத்தி இருக்கிறார்கள் எனவும், என்ன மாதிரியான வாக்குமூலங்களைப் பெற்று உள்ளார்கள் என்பது குறித்தும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது.