சென்னை
சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை விலக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி வைணவம் சைவம் தொடர்பாக சர்ச்சை கூறிய கருத்துக்களை தெரிவித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதற்கு திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்தார்.
திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கி தமிழ்நாடு முதல் அமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும் இதனைத்தொடர்ந்து தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டு பொன்முடி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜகன்நாத் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,
”பொன்முடி அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் அமைச்சர் பதவியை வகிப்பவர் அவர் மத ரீதியான கருத்துக்களை தெரிவிக்கும் போது பொதுமக்களின் மனம் புண்படாத வகையில் பேசி இருக்க வேண்டும் ஆனால் மிகவும் அவதூறான கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார். அதனால் அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்க உத்தரவிட வேண்டும். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும்
என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கை அடுத்த வாரம் விசாரித்து எடுத்துக் கொள்வதாக கூறிய தலைமை நீதிபதி, அமைச்சர் பொன்முடி தான் தெரிவித்த கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டு உள்ளாரே..? அது மட்டுமல்ல அவரை கட்சியின் பதவியிலிருந்து நீக்கியதாகவும் பத்திரிகை செய்தி வந்துள்ளதே..? என்றும் கேள்வி எழுப்பிய பின்னர் இந்த வழக்கை அடுத்த வாரம் விசாரிப்பதாக கூறியுள்ளார்.