சென்னை:
விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த தங்களது மகன் மர்மமான முறையில் உயிரிழந்தாக மாணவனின் பெற்றோர் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவைச் சேர்ந்தவர்கள் சீராளன் – நாகம்மாள் தம்பதி. இவர்கள் சி.எம் செல்லில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில், “மாமண்டூரில் விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் கல்லூரியில் எங்களது மகன் சிவசுப்பிரமணி 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த ஏப்ரல் 30-ந் தேதி மாலை அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. இதையடுத்து நாங்கள் வந்து பார்த்தபோது எங்களது மகன் இறந்துவிட்டான். எங்களது மகனின் நண்பர்களிடம் நான் விசாரித்தபோது, கல்லூரியிலேயே அவரை அடித்து கொலை செய்து விட்டனர் என்று கூறினர்.
இது தொடர்பாக படாளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய விஜயகாந்த், பிரேமலதா, எல்.கே.சுகேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாமகவைச் சேர்ந்த கேகே ஜெயராமன், விஜயகாந்த் தரப்பு வழக்கறிஞர் கோதண்டராமன் ஆகியோர் எங்களை சமரசம் செய்ய முயன்றனர். தற்போது எங்களுக்கு சிலர் மிரடல் விடுத்து வருகின்றனர். சிலர் பஞ்சாயத்து பேசுகின்றனர். எனவே பஞ்சாயத்து பேசுபவர்களையும், கல்லூரி நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரின் தனிப்பிரிவில் 6.6.2016 அன்று மனு அளித்திருந்தோம்.
மேலும், போயஸ் கார்டனில் மனு அளித்தோம். பெரம்பலூர் எம்எல்ஏவிடம் மனு அளித்தோம். எந்த பயனும் இல்லை என்பதால் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்” என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.