ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை முடிந்து உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. பொங்கலுக்கு முன் தீர்ப்பு கூற வேணடும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மத்திய அரசு ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசும், எதிர்க்கட்சியான தி.மு.க.வும் கோரிக்கை விடுத்தது.
ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டுக்கு புதிய விளக்கம் அளித்துள்ளது.
பீட்டா இந்தியா அமைப்பின் விலங்குகள் விவகார இயக்குநர் மணிலால் வலியாட்டே கூறியதாவது:
பொங்கல் பண்டிகை என்றால் இயற்கைக்கு நன்றி செலுத்துதல் என்று பொருள். இந்த நாளில் தெய்வங்களை வணங்கலாம். இனிப்புளை பரிமாறிக்கொள்ளலாம். மாடுகளை அலங்காரம் செய்யலாம். ஆனால். இந்த நாளில் மாடுகளை கோபமூட்டும், துன்புறுத்தும் ஜல்லிக்கட்டை நடத்தப்படுகிறது. இந்திய விலங்குகள் வன்கொடுமைச்சட்டம் 1960-ன்படி, மாட்டுவண்டி பந்தயம்,
ஜல்லிக்கட்டு போன்றவற்றை 2011ம் ஆண்டே மத்திய சுற்றுச் சூழல் துறை தடை செய்துவிட்டது. தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் காளை மாடுகள் பாதுகாக்கப்படுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பில் மாட்டு வண்டி பந்தயம், காளை சண்டை, ஜல்லிக்கட்டு நடத்துவது இந்திய சட்ட
விரோதமானது என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, கோவாவில் காளை சண்டை, மஹாராஷ்டிரா, பஞ்சாப்பில் எருதுப் பந்தயமும் அதிகமாக நடக்கிறது. இயற்கை சூழல்களான காடுகள், ஏரிகள், ஆறுகள், விலங்கினங்களை பாதுகாப்பது மற்றும் பராமரிப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை. இந்தியாவில் பல ரக மாடுகள் வளர்க்கப்படுகிறது. ஆனால், எந்த ரகத்தில் மாடுகளை இனப்பெருக்கம் செய்ய வேண்டும் என்பதை பால் வளத்துறை தான் தீர்மானிக்கிறது. மாட்டினத்தை பாதுகாப்பது குறித்து அறிவியல் ரீதியாக அரசு முயற்சிகளை மேற்கொள்கிறது.
ஜல்லிக்கட்டுக்கு மதச்சாயம் பூசப்பட்டுள்ளது. மேலும் தவறாக சித்தரிக்கப்படுகிறது. இந்துக்கள் மாடுகளை தெய்வமாக வணங்குகின்றனர். சிவன் பெருமானின் நந்தியாகப் போற்றுகிறார்கள்.
ஆனால் மாடுகளுக்கு ஆதரவாக பேச மறுக்கிறார்கள். ஜல்லிக்கட்டில் மாடுகளை ஒரு சிறிய இடத்தில் அடைத்து வைக்கப்படுகிறது. அதற்கு கோபம் ஏற்படும் சூழலை உண்டாக்குகின்றனர். அதை வலுக்கட்டாயமாக ஓடவைக்கின்றனர். இதனால் அந்த மாட்டின் உயிருக்கும், அதை அடுக்கும் மனிதர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
இந்த போட்டியை பார்க்கும் பார்வையாளர்கள் ஓடும் போது கீழே விழுந்தும், தடுப்புகளில் மோதிம் காயம் அடைகின்றனர். உயிரிழப்பு சம்பவங்களும் நடக்கிறது. இதை கண்காணித்தவர்கள் உறுதி செய்துள்ளனர். கடந்த 2010ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை ஆயிரத்து 100 பேர் வரை காயம் அடைந்துள்ளனர். 17 பேர் இறந்துள்ளனர். ஆதலால் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.