சென்னை
கோரோனா தொற்று காரணமாக சீன நாட்டின் ஊகான் உள்ளிட்ட அனைத்து நகரங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை முறை மாற்றபட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் படு வேகமாகப் பரவி வருகிறது. இது வரை அந்த வைரஸ் தாக்குதலால் 170க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளதாகவும் 7000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் பரவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் கேரள மாநிலத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கண்டறிந்துள்ளனர்.
ஊகான் நகரில் கல்வி பயிலும் மாணவியான அந்தப் பெண் வைரஸ் தொற்று காரணமாகத் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். மேலும் கேரள எல்லைப் பகுதிகளான கன்னியாகுமரி மற்றும் கோவை மாவட்டங்களில் தமிழக அரசு கடும் பரிசோதனைப் பணிகளை நடத்தி வருகிறது. வெளிநாடுகளில் குறிப்பாகச் சீனாவில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை குறித்த தகவல்களை நேற்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இன்று முதல் சீனாவில் உள்ள ஊகான் மற்றும் உள்ள அனைத்து நகரங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து பயணிகளும் இரத்த பரிசோதனை செய்யப்படுவார்கள். அது மட்டுமின்றி அவர்கள் தனிமையில் 28 நாட்களுக்கு வைக்கப்படுவார்கள். இரத்த மாதிரிகள் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பப்பட உள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சீன நாட்டவர் உள்ளிட்ட சுமார் 78 பேர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை தினமும் ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் செவிலியர் கவனித்து வருகின்றனர். அவர்களிடம் இன்ஃப்ளுயன்ஸா அறிகுறி தென்பட்டால் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் இதுவரை அத்தகைய அறிகுறிகள் இல்லை எனவும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.