சென்னை

சென்னையில் பொது வெளியில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.  இதையொட்டி நகரில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.   இன்று சென்னையில்  237 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,40,300 ஆகி உள்ளது. இதில் 8345 பேர் உயிர் இழந்து 5,29,907 பேர் குணம் அடைந்து தற்போது 2,259 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னை மாநகராட்சி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.  அதில், “பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி பொது வெளியில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் அமைப்புக்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது இந்தியக் குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்துக் கொள்ள வேண்டும்.  நகரில் உள்ள ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்குகள், சமூக நலக் கூடங்கள் ஆகியவற்றில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்வுகளும் மாநகராட்சிக்கு இணையம் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.

திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் கலந்து கொள்வோர் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். நுழைவு வாயிலில் சானிடைசர் வைக்கப்பட்டு கைகளை சுத்தம் செய்த பின் உள்ளே அனுமதிக்கவேண்டும்.  நிகழ்ச்சியில் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அமர வேண்டும்.  உணவு உண்ணும் இடங்களில் இருக்கைகள் இடைவெளியுடன் அமைக்க வேண்டும்.” என எச்சரிக்கப்பட்டுள்ளது.