திருநெல்வேலி
திருநெல்வேலியில் பணமோசடி வழக்கில் சிக்கி தலைமறைவானர் 18 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம், மானூர், மேலபிள்ளையார்குளத்தைச் சேர்ந்த காளிதாஸ், கருப்பசாமி, மாரியப்பன் ஆகியோரிடம் மதுரை மாவட்டம், தாசில்தார் நகர், ராயல் அவென்யூவை சேர்ந்த பிரேம்குமார் மற்றும் அவரது மனைவி காளிஸ்வரி இருவரும் சேர்ந்து வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.4 லட்சத்து 5 ஆயிரம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க, காளிதாஸ் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில், நீதிமன்றத்தின் உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது
கடந்த 2006-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து தேடப்பட்டு வந்தவர்களான பிரேம்குமார் மற்றும் காளிஸ்வரியை கைது செய்து நடவடிக்கை எடுக்க, திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு-I டி.எஸ்.பி. விஜயகுமார் மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையில், எஸ்.எஸ்.ஐ. கண்ணன், ஏட்டுகள் முத்துராமலிங்கம், தமிழ்செல்வி ஆகியோர் பிரேம்குமார், அவரது மனைவி காளிஸ்வரி இருவரையும் தேடி வந்தனர்.
பிரேம்குமார் கோயம்புத்தூர் மாவட்டம், வடவல்லி, ஸ்ரீராம்நகர், 3வது அன்பகம் தெரு அருகே இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று நேற்று (04.04.2025) கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தனர். இவ்வழக்கில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்து 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை சிறப்பாக செயல்பட்டு கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரை மாவட்ட எஸ்.பி. பாராட்டியுள்ளார்