சென்னை: சென்னையில் தற்காலிக கொடிக்கம்பங்கள் நட அனுமதி பெறுவது கட்டாயம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில், பொதுக்கூட்டம், தேர்தல் பரப்புரை, தர்ணாவுக்காக தற்காலிக கொடிக்கம்பம் நட முன்அனுமதி பெற வேண்டும். முன்அனுமதி பெறாமல் நடப்படும் தற்காலிக கொடிக்கம்பங்கள் அகற்றப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம்,   சாலை ஓரங்களில் தற்காலிகமாக கொடிக்கம்பங்கள் வைக்க அனுமதி கோரும் நபர்களிடம், ஒரு கொடி கம்பத்துக்கு, 1,000 ரூபாய் வசூலிக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

ஏற்கனவே நீதிமன்ற  உத்தரவின்பேரில்,  அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில், கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, மண்டல மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.  அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்காக, கொடிக்கம்பங்கள் அமைக்கும்போது, சாலை நடுவில் உள்ள, ‘சென்டர் மீடியன்’ பகுதிகளில் கொடிக்கம்பங்கள் அமைக்கக் கூடாது; மூன்று நாட்களுக்கு மேல் கொடிக்கம்பங்கள் வைத்திருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

இந்த நிலையில், தற்போது உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில்,  சென்னையில் தற்காலிக கொடிக்கம்பங்கள் நட அனுமதி பெறுவது கட்டாயம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.