டெல்லி: சென்னை – பெங்களூரு உள்பட  நாடு முழுவதும்11 தொழில்துறை வழித்தடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக  நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடர் பெகாசஸ் அமளிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதில், உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய தொழில்துறை இணைஅமைச்சர் சோம் பர்காஷ் எழுத்துமூலம்  பதில் அளித்தார்.

அதில், நெடுஞ்சாலைத்துறை மூலம் நாடு முழுவதும் 11 தொழில்துறை வழித்தடங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும்,  இவற்றில் 32 திட்டங்களும் அடங்கி உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த வழித்தடங்கள்  4 கட்டங்களாக அமைக்கப்படும் என்றும்,  இவற்றில் சில வழித்தடங்கள் கருத்துருவாக்கம், வளர்ச்சி மற்றும் செயல்படுத்தலின் பல்வேறு நிலைகளில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருப்பதுடன், இவற்றில் சென்னை-பெங்களூரு, டெல்லி-மும்பை, அமிர்தசரஸ்-கொல்கத்தா ஆகிய வழித்தடங்கள் முக்கியமானவை என்றும் அமைச்சர்  சோம் பர்காஷ் குறிப்பிட்டுள்ளார்.