சென்னை: திருப்பரங்குன்றம் பிரச்சனைக்காக சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி அளிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டு உள்ளது.
இந்த உத்தரவு காரணமாக, இனிமேல், ஒரு பகுதி பிரச்சினை என்றால், அந்த பிரச்சினைக்குரிய பகுதியில்தான் போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி போன்றவைகள் நடத்தப்பட வேண்டுமா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும்’ என்ற கோரிக்கையுடன், வருகிற 18-ம் தேதி சென்னை தங்கசாலையில் உள்ள, ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து, கந்தகோட்டம் முருகன் கோவில் வரை, வேல் யாத்திரை செல்ல இந்து முன்னணி அனுமதி கோரியிருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, பாரத் இந்து முன்னணி வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் எஸ்.யுவராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்து வருகிறார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, ‘இந்துக்களுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்தும் நோக்கில், சென்னையில் கந்தகோட்டம் முருகன் கோவிலை நோக்கி, அமைதியான முறையில், வேல் யாத்திரை மேற்கொள்ள அனுமதி கோரியும், போலீசார் அனுமதிக்கவில்லை என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர்,, தற்போது வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரும் மின்ட் பகுதி, போக்கு வரத்து நெருக்கடி மிகுந்தது. திருப்பரங்குன்றம் மலையின் உரிமை தொடர்பாக, ஏற்கனவே, ‘பிரிவியூ கவுன்சில்’ வரை சென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்துக்களும், முஸ்லிம்களும், மத நல்லிணக்கத்துடன் சமூக ஒருமைப்பாட்டை, ஒற்றுமையை நிலைநாட்டி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலையை காரணமாக்கி, இந்த ஒற்றுமையை குலைத்து விடக்கூடாது. பொது அமைதி, மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை பேணப்பட வேண்டும்,’ என வாதிடப்பட்டது.
இதையடுத்து, ‘திருப்பரங்குன்றம் மலையை காக்க, சென்னையில் பேரணி செல்ல வேண்டிய அவசியம் என்ன?’ என, நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், தீர்ப்பை நாளைக்கு (அதாவது இன்று) ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. மேலும் பாரத் இந்து முன்னணி யுவராஜ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த உத்தரவு காரணமாக, இனிமேல், ஒரு பகுதி, ஒரு மாவட்டம், ஒரு மாநிலத்தில் பிரச்சினை என்றால், அந்த பிரச்சினைக்குரிய பகுதியில்தான் போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி போன்றவைகள் நடத்தப்பட வேண்டுமா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று நீதிபதி பேரணிக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபோல அனைத்து வழக்குகளிலும் நீதிமன்றமும், அரசும் இதுபோல செயல்பட்டால், தமிழ்நாட்டில் எந்தவொரு பேரணி, ஆர்ப்பாட்டம், போராட்டம் நடைபெற வாய்ப்பே இல்லைத நிலை உருவாகும். தமிழக மக்களும் நிம்மதியாக இருப்பார்கள். செய்வார்களா….?