டில்லி

வீட்டில் இருந்து பணி புரிவது நிரந்தரமானால் ஊழியர் மனநிலை பாதிப்பு அடைவார்கள் என மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைமை அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணி புரிய அனுமதி அளித்தது.   ஊரடங்குக்கு  பிறகு அது கட்டாயமானது.   தற்போது நிர்வாக வசதிகளுக்காக இந்த முறையை நிரந்தரமாக்கப் பல நிறுவனங்கள் அரசிடம் அனுமதி கோரி உள்ளன.  டிவிட்டர், கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணி புரிவதை நீட்டித்துள்ளன.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வீட்டில் இருந்து பணி புரிவதை அக்டோபர் மாதம் வரை நீட்டித்துள்ளது.  அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி சத்யா நாதெள்ளா ஒரு பேட்டியில், “கொரோனா தாக்கத்தால் வீட்டில் இருந்து பணி புரிவது நீட்டிக்கபட்டுள்ள்து.  ஆனால் இதை நிரந்தரமாக்கக் கூடாது.  இதை நிரந்தரமாக்கினால் இவ்வாறு பணி புரியும்  ஊழியர்கள்  மனநிலை பாதிப்பு அடைவார்கள்.

ஒரு கலந்துரையாடலின் போது ஊழியர்கள் அவர்களின் அருகில் உள்ளவர்களுடன் நேரடியாக உரையாட முடிகிறது    ஆனால் ஆன்லைன் கலந்துரையாடலில் அந்த வசதி கிடையாது.  அருகில் இல்லாதவர்களுடன் இருப்பதைப் போல் எண்ணிப் பேச வேண்டியதாகி விடுகிறது.   இது மனநிலைக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.  மேலும் ஒரு ஊழியர் சமுதாயத்துடன் பணி புரிந்தோர் தற்போது தனிமையில் பணி புரிவது மிகவும் கொடுமையானது.” எனத் தெரிவித்துள்ளார்.