சேலம்: பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் இன்று ஆட்சிமன்ற குழு கூட்டத்தை கூட்டியிருந்த நிலையில், இன்று ஆட்சி மன்ற குழு கூடி, அவரை பல்கலைக்கழக பொறுப்பு  பதவியில் இருந்து  நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

சேலம் மாவட்டம், பெரியாா் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் தி.பெரியசாமியை நீக்கம் செய்து ஆட்சி மன்ற குழு நடவடிக்கை எடுத்துள்ளது. பெரியாா் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது துணைவேந்தராக இருந்த ரா.ஜெகந்நாதன் பணி நிறைவு பெற்றதை அடுத்து புதிய துணைவேந்தரைத் தோ்வு செய்வதற்கான தேடுதல் குழு தமிழக அரசு சாா்பில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், புதிய துணைவேந்தரை நியமிக்கும்வரை துணைவேந்தருக்கான பொறுப்புகளை கவனிக்கும் வகையில், தமிழ்த் துறைத் தலைவா் தி.பெரியசாமி பொறுப்பு துணைவேந்தராக நியமித்து ஓய்வுபெற்ற துணைவேந்தர் ஜெகநாதன் அறிவித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்காலிக துணை வேந்தராக நியமிக்கப்பட்டிருக்கும் பெரியசாமி  அப்பதவிக்கு எந்த வகையிலும் தகுதியற்றவர். போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதுடன், அது குறித்த வழக்கும் விசாரணையில் இருந்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மேலும், பெரியார்  பல்கலைக்கழகத்தின் பதிப்புத்துறையில் முறைகேடு செய்ததாக அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு நியமித்த பழனிச்சாமி குழு விசாரணை நடத்தி  அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.

இந்த நிலையில்,  பணி நீக்கம் செய்யப்பட வேண்டிய ஒருவர்  தற்காலிக துணை வேந்தராக நியமித்திருந்தது பேசும்பொருளாக மாறியது. இதற்கிடையில், பெரியாா் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் தி.பெரியசாமி இன்று (மே 28)   ஆட்சி இன்ற குழு கூட்டத்தை கூட்டியிருந்தார். இதில், தன்னை தேர்வு செய்வார்கள் என எதிர்பார்த்திருந்தார்.

இந்த நிலையில்,  பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழு கூட்டம்  இன்று (புதன்கிழமை)  நடைபெற்றது. இதில், குழுவின் தலைவராக பள்ளி கல்வித்துறை இயக்குநர் சுந்தரவல்லி, பேராசிரியர்கள் சுப்பிரமணி மற்றும் ஜெயந்தி ஆகியோர் கொண்ட குழு கூடி,   பெரியார் பல்கலைக்கழகத்தின்  பொறுப்புத் துணைவேந்தன் பதவி செல்லாது என அறிவித்தது. இதனையடுத்து பொறுப்புத் துணை வேந்தர் பதவி தாமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது,   இன்று கூடிய ஆட்சி மன்ற குழுவில்,  பெரியார் பல்கலைக்கழகத்தின் தற்காலிக துணைவேந்தர் பதவியிலிருந்து முனைவர் பெரியசாமியை நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பேராசிரியா் தி.பெரியசாமி, ஆட்சிக்குழு உறுப்பினா், புல முதன்மையா், பதிப்புத் துறை இயக்குநா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.