மதுரை:
கீழடியில் பழந்தமிழர் நாகரீகம் குறித்து நடந்த தொல்லியல் ஆய்வு மண்மூடி நிரப்பப்படுவது வரலாற்று ஆய்வாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை அருகே கீழடி பகுதியில் நடந்து வந்த அகழ்வாராய்ச்சி, மண் மூடி மூடப்படுகிறது.
“நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை மற்றும் ஆய்வுகளைத் தொடர்வதற்கான இடம் கிடைக்காதது போன்ற காரணங்களால் கீழடி ஆய்வு முடங்கிக் கிடக்கிறது’ என்று வரலாற்று ஆர்வலர்கள் வருத்தம்தெரிவிக்கின்றனர்.
இந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல் பொருட்களை பெங்களூருக்கு கொண்டு செல்ல கூடாதென்றும், தோண்டப்பட்ட குழிகளையும் மூடக்கூடாதென்றும் கனிமொழி என்பவர் தாக்கல் செயத வழக்கில் மதுரை உயர்நீதி மன்ற கிளை தடைவிதித்தது.
இந்த நிலையில் நிலத்துக்காரர்களிடம் ஆய்வு முடிந்ததும் ஒப்படைப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் குழிகளை மூடுவதற்கு அனுமதிக்க வேண்டுமென்று கடந்த 18 ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது தொல்லியல்துறையினர் கோரியிருந்தார்கள். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்த அடிப்படையில் தற்போது அக்குழிகளை மூடும் பணிகள் கீழடியில் நடந்து வருகிறது.
இது குறித்து தொல்லியல் குழுவினர், “மழைக்காலம் துவங்குவதால், நிலத்தை மீண்டும் பயன்படுத்தும் வகையில் குழிகளை மூடி, நிலத்தை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதனால் மூடுகிறோம், விரைவில் மத்திய தொல்லியல்துறை உயர்நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்ய உள்ளது. அதன் பின்பு கீழடி ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும்” என்று தெரிவிக்கின்றனர்.
ஆனால் தமிழர் வரலாற்றின் அரிய பொக்கிஷம் மூடப்படுவது வரலாற்று ஆய்வாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.