பெரம்பூர்:
தனக்கு உலக வங்கியில் ரூ.4லட்சம் கோடி கடன் இருப்பதாக பெரம்பூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரின் மோகன் ராஜ் என்பவர் தனது வேட்புமனு தாக்கலின்போது சமர்ப்பிக்கப்பட்ட சொத்து விவர பட்டியலில் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் வரும் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. 18 தொகுதிகளில் சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியும் ஒன்று.
இந்த தொகுதிக்கு, அதிமுக சார்பில், ஆர்.எஸ். ராஜேஷ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்த வெற்றிவேல் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடுகிறார். இவர்களுக்கு இடையில் திமுக சார்பில், ஆர்.சேகர் களமிக்கப்பட்டு உள்ளார்.
கடுமையான போட்டி நிலவும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 40 பேர் போட்டியிடு கின்றனர். இந்த நிலையில் சுயேச்சை வேட்பாளர் மோகன்ராஜ் என்பவர் வேட்புமனுவுடன், தனதுசொத்து விவரங்கள், கடன் மற்றும் வங்கி இருப்பு குறித்து தாக்கல் செய்துள்ளதில், தனக்கு உலக வங்கியில் ரூ.4 லட்சம் கோடி கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், அவரது வேட்புமனுவையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருவரது கடன் மட்டுமல்லாது அவர் குறிப்பிட்டுள்ள தகவல்கள் உண்மைதான என்பது குறித்து அறிந்துகொள்ளாமலே தேர்தல் ஆணையம் செயல்படுவது இதன்மூலம் ஊர்ஜிதமாகி உள்ளது.
4லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாக கூறியுள்ள மோகன்ராஜ், முன்னாள் எம்.பி. திருஞானத்தின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது பரபரப்பை மட்டுமல்லாமல் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
உலக வங்கியில் கடன் பெற எங்கப்பா அப்ளிகேஷன் கிடைக்கிறது… எங்களுக்கும் சொல்லுங்கப்பா…. என்று சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்படுகிறது.