புதுக்கோட்டை:

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழக பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று தமிழகம் வந்திருந்தார். அவரது கூட்டத்தில் மக்கள் கூட்டத்தை காட்டும் வகையில்  பக்கத்து ஊர்களில்  இருந்து வாகனங்களில் ஆட்களை அழைத்து வந்தும், நேற்றைய புதுக்கோட்டை கூட்டம் மக்களின்றி வெறிச்சோடியே கிடந்தது.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, சிவகங்கை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக நேற்று அமித்ஷா  புதுக்கோட்டை அருகே திருமயம் லேணா விளக்கு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு  வாக்கு சேகரித்தார்.

முன்னதாக லாரி, டெம்பா, குட்டியானை போன்ற சரக்கு  வாகனங்களில் அழைத்து வரப்பட்ட மக்கள், மதியம் முதலே அமித்ஷா வருகைக்காக காத்திருந்தனர். ஆனால், அவர் தாமதமாக மாலை 4.30 மணிக்கு மேடைக்கு வந்த நிலையில், அழைத்து வரப்பட்ட பெண்கள் பொறுமை யிழந்து பலர் அங்கிருந்து அகன்றனர். இதன் காரணமாக ஏராளமான சேர்கள் காலியாக கிடந்தது. இது அதிமுக பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

அமித்ஷா கூட்டம் முடிந்ததும், கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் உள்பட பக்கத்து ஊர்களை சேர்ந்தவர்களை மீண்டும்  சரக்கு வாகனங்களில் ஏற்றிச்சென்றனர் கட்சியினர். அப்போது, அதிக அளவில்  பெண்களை வீட்டுக்கு ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியது. இதில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே காயமடைந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் காயமடைந்த   ஈச்சம்பட்டியைச் சேர்ந்த 3 பெண்கள்  பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொன்னமராவதி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.