நேரடி பண பரிவர்த்தணையில் இருந்து மக்கள் வெளியே வர நீண்ட நாட்களாகும்: எஸ்பிஐ தலைவர் பேட்டி
டெல்லி:
நேரடி பண பரிவர்த்தணையில் இருந்து மக்களை வெளியே கொண்டு வர நீண்ட நாட்களாகும். இது ஒரு நாளில் நடந்துவிடாது என எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி:
பணமதிப்பிறக்க அறிவிப்பு நாட்டின் பொருளாதாரத்தில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வாங்கும் திறன் குறைந்திருப்பதால் காய்கறி உள்ளிட்ட சில பொருட்களின் விலை குறைந்துள்ளது. இது எதிர்காலத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தற்போது கணிக்க முடியவில்லை. எப்படி மக்கள் உடனடியாக தங்களது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள போகிறார்கள் என்பது தெரியவில்லை.
 

91 சதவீத இல்லத்தரசிகள் தற்போது வங்கி கணக்கு வைத்துள்ளனர். தினமும் ஒரு லட்சம் புதிய கணக்குகள் தொடங்கப்படுகிறது. இதற்கு முன் நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் கணக்குகள் மட்டுமே தொடங்கப்பட்டது. எதிர்காலத்தில் வங்கி பண பரிமாற்றத்திற்கு வரி வசூலிக்கும் நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்த நிலை வந்தால் முன்பை விட சவுகர்யமாக தான் இருக்கும். பணத்தை கையாளுவது என்பது நாட்டின் மிகப் பெரிய சுமையாகும். பணத்தை பாதுகாக்கவும், எடுத்து செல்வதற்கும் அதிகளவில் செலவிடப்படுகிறது. இது போன்ற செலவுகள் குறையும்.
வாடிக்கையாளர்கள் செய்த டெபாசிட் தற்போது எங்களது கையில் இல்லாத நிலையிலும் அவர்களுக்கு வட்டி கொடுத்தாக வேண்டும். இது போன்ற செலவினங்கள் எதிர்காலத்தில் அரசுக்கு தெரிவித்து நிவாரணம் பெறப்படும். மக்கள் தற்போது செலவிட போதுமான பணம் இருக்கிறது. அவர்கள் இருப்பு வைப்பதற்கு தான் பணம் பற்றாகுறையாக உள்ளது. 2000 ரூபாயை மாற்றும் போது சுமார் 18 நூறு ரூபாய் நோட்டுக்கள் திரும்ப கிடைக்கும். இந்த சில்லரையை பெறும் போது தவறு நடக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனினும் மக்கள் 100 ரூபாயை விரும்பமாட்டார்கள்.
500 ரூபாய் நோட்டு முழு அளவில் பயன்பாட்டுக்கு வந்த பிறகு தற்போதுள்ள பற்றாகுறைக்கு தீர்வு கிடைக்கும். பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட்ட பணம் மறுபடியும் வங்கிக்கு தற்போது வருவது கிடையாது. திரும்ப எடுப்பதில் சிரமம் இருப்பதால் வியாபாரிகள் பணத்தை தங்களது கைவசமே வைத்துக் கொள்கின்றனர்.
 

அவசர செலவுக்காக வீட்டில் 30 முதல் 40  ஆயிரம் ரூபாய்  வைத்திருந்த பணம் தற்போது வங்கிக்கு வந்துள்ளது. இந்த பணத்தை மீண்டும் எடுத்துச் சென்று வீட்டில் வைக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். எனினும் டிஜிட்டல் பரிவர்த்தனையை கொண்டு வர போராட வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையை அடைய நீண்ட காலமாகும். ஒரு நாளில் இது நடந்து விடாது.
ஸ்வைப் மெஷினுக்கு பதிலாக பண பரிவர்த்தனைக்கு ஏற்கனவே ஸ்மார்ட போன்கள் பயன்படுத்தப்படுகிறது. ஸ்வைப் மெஷின் பயன்பாடு 3 மடங்கும், வாலட் பயன்பாடு 5 மடங்கும் அதிகரித்துள்ளது. ஜனவரி 10 முதல் 15ம் தேதிக்குள் பழைய நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது வங்கிகளில் கூட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேரடி பண பரிவர்த்தணையை குறைக்க சில நடவடிக்கைகளை அரசு  மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட அளவுக்கும் மேல் பணத்தை நேரடியாக பரிவர்த்தனை செய்தால் வரி, கட்டணம் போன்றவை விதிக்கப்பட வேண்டும்.
 
People will take a long to time come out from cash transaction.