சென்னை: பொதுமக்கள் ஒருசில நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் மழை கொட்டி வருகிறது. இதனால் சென்னை உள்பட பல பகுதிகளில் வெள்ளத்தில் மிதக் கின்றன. சாலை முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்த நிலையில், வங்க கடலில் அந்தமான் அருகே இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட சில மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் சென்னையின் பல பகுதிகளில் மின்சாரமும் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் வாழ்வதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. மீட்பு பணிகளும், தண்ணீரை வெளியேற்றும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சென்னை, தேனாம்பேட்டை கிரியப்பா சாலையில் உள்ள கூவம் ஆற்றை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேரில் ஆய்வு செய்தார். அதன்பின் செங்தியாளர்களை சந்தித்போது, சென்னையில் தேங்கியுள்ள தண்ணீர் 570 க்கும் மேற்பட்ட மோட்டார் வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. பிற்பகலுக்குள் தண்ணீர் தேங்கியுள்ள அனைத்து இடங்களிலும் தண்ணீர் அகற்றப்பட்டுவிடும் எனவும் கூறினார்.
மேலும், தண்ணீரால் சூழப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும், மேலும் 44 இடங்களில் படகுகள் தற்பொழுது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்னும் இரு நாட்களுக்கு கனத்த மழை பெய்யும் என்பதால், மக்கள் தேவை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் எனவும், தேவையான தண்ணீர், உணவு பொருட்கள் உள்ளிட்டவைகள் வாங்கி வைத்து கொள்ளுங்கள் என்று ஆலோசனை கூறினார்.
சென்னையில், மழை பாதிப்பு காரணமாக, பாதிக்கப்படும் மக்கள் தங்குவதற்காக, முன்னெச்சரிக்கையாக 44 முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்தும், எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கண்காணிப்பு அலுவலர்களுடனான கூட்டம் கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையாளர் திரு.கே.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசு முதன்மைச் செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி மற்றும் துணை ஆணையாளர்கள் மற்றும் 15 மண்டலங்களுக்கான கண்காணிப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.