பிக்பாஸ் எந்த அளவுக்கு புகழ் பெற்றதோ அதே போல புகழ் பெற்ற விசயம், பாடலாசிரியர் சிநேகனின் கட்டிப்பிடி பாசமும் ரொம்பவே பேமஸ். இவரது அன்பில் “கட்டுண்டு” நெகிழாதவர்களே பிக்பாஸ் டீமில் இல்லை.
யாருக்காவது உடம்பு சரியில்லை அல்லது மனசு சரியில்லை என்றால் ஆதரவாக – அன்பாக கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்பவர் சிநேகன்தான். நிகழ்ச்சியைவிட்டு யாரேனும் வெளியேறினாலும் சிநேகன்தான் முதல் நபராக ஓடிவந்து கட்டிப்பிடித்து கண்கலங்குவார்.
ஏற்கெனவே “டைனமிக் கல்யாணம்” என்ற பெயரில் சிநேகன் நிகழ்த்திய திருமணங்களில் மணமகள் உட்பட அனைவரையும் கட்டிப்பிடித்து ஆசியும் வாழ்த்தும் வழங்கினார். அது அப்போது பரவலாக எதிர்ப்பை சம்பாதித்தது.
சரி, சிநேகனின் புதுக்கரியப்பட்டி கிராம மக்கள், சிநேகனின் இந்த தழுவுதல் குறித்து என்ன நினைக்கிறார்கள்?
தஞ்சையில் இருந்து 37 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுக்கரியப்பட்டி சென்று, அந்த ஊர் மக்கள் சிலரைச் சந்தித்துப் பேசினோம்.
“செல்வம் அண்ணன் ரொம்ப பாசமான மனுசன்” என்றார்கள். (செல்வம் என்பது சிநேகனின் சொந்தப்பெயர்)
மேலும் அவர்கள் தெரிவித்ததன் தொகுப்பு:
“செல்வம், வருசா வருசம் பொங்கலுக்கு ஊருக்கு வந்துருவார். இங்கேதான் பொங்கல் கொண்டாடுவார். இடையிலும் அவ்வப்போது ஊருக்கு வருவார்.
பாடலாசிரியர், நடிகர் என்ற பந்தா எதுவும் அவருக்குக் கிடையாது. கிராமத்தினர் எல்லோரிடமும் அந்நியோன்யமா பழகுவார். கிட்டதட்ட இங்க இருக்கிற எல்லோருமே அவருக்கு உறவுக்காரங்கதான். எல்லோரையும் முறை போட்டு அவ்வளவு அன்பா அழைப்பார்.
குறிப்பா தன் வயசு.. தன்னைவிட சின்ன வயசு பசங்ககிட்ட ரொம்ப பாசமா பழகுவார். நமக்கு ஏதாவது மனசு கஷ்டம்னா அன்பா ஆறுதல் சொல்வார். எங்களையும் கட்டிப்பிடிச்சுத்தான் ஆறுதல் சொல்லுவார்.
இதுல என்ன தப்பு இருக்கு… சகோதர பாசத்துலதானே கட்டிப்பிடிக்கிறாரு..
ஊர்ல இயல்பா எப்படி இருப்பாரோ.. அதே மாதிரித்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இருக்காரு…
ஓவியாவோட லவ் ஸ்டோரி ஒளிபரப்பானப்ப கமல் பேசிக்கிட்டிருந்தாரு.. அப்போ செல்வம் அழுதிட்டார்.
அடுத்தவங்க கஷ்டத்தைக் கேட்டா உணர்ச்சிவசப்பட்டு பேசுவார். யார்கிட்டயும் அன்பு, உரிமையோடு பழகுவார். மத்தபடி அந்த நிகழ்ச்சிக்காக அவர் அப்படி நடந்துக்கலை. அவர் இயல்பே அப்படித்தான்” என்கிறார்கள் சிநேகனின், புதுக்கரியப்பட்டி மக்கள்.