சென்னை

டந்த 2015 ஆம் வருடம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தைப் போல் மீண்டும் ஏற்படாமல் தடுத்த நீர்வளத்துறை அதிகாரிகளுக்குப் பாராட்டு மழை குவிகிறது.

2015 வெள்ளம்

தமிழக தலைநகர் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக 5 ஏரிகள் உள்ளன.  அவை புழல், சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை ஆகியவை ஆகும்.  வடகிழக்கு பருவமழை மூலம் இந்த ஏரிகள் நீர்வரத்தைப் பெறுகின்றன. கடந்த 6 ஆம் தேதி முதல் பெய்து வந்த தொடர் கனமழையால்  இந்த 5 ஏரிகளிலும் நீர் முழு கொள்ளளவை எட்டியது.

இதைப் போல் கடந்த 2015 ஆம் ஆண்டு நிரம்பியபோது ஏரிகளில் உள்ள நீரை அவசரமாகத் திறந்து விட்டதால் நகரெங்கும் வெள்ளம் ஏற்பட்டுப் பல இடங்கள் முழுகின.   மீண்டும் இது போல நிலை ஏற்படுவதைத் தடுக்க நீர்வளத்துறை மிகவும் கவனம் செலுத்தியது.  வடகிழக்கு பருவமழை அதிகரிக்கும் என தெரியவந்தவுடன் செம்பரம்பாக்கம் ஏரியில் 3 அடி காலியாக வைக்கப்பட்டது.

செம்பரம்பாக்கத்தில் நீர்வரத்து அதிகரித்த உடன் ஆரம்பத்தில் 2000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.   மேலும்  நீர் வரத்து அதிகரித்ததால் 7 ஆம் தேதி காலை 2095 கன அடி 11  ஆம் தேதி காலை 2151 கன அடி, 12 ஆம் தேதி காலை 2146 கன அடி என மெதுவாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.   இதனால் 2015 ல் நடந்தது போல வெள்ளம் ஏற்படுவது நடைபெறவில்லை.

இதைப் போல் புழல் ஏரியிலும் சோழவரம் ஏரியிலும் நீர் அளவு மிகக் குறைவாகத் திறக்கப்பட்டது.  தவிர பூண்டி ஏரியைப் பொறுத்த வரையில் எவ்வளவு நீர் திறக்கப்பட்டாலும் அது கொசஸ்தலை ஆறு வழியாகக் கடலில் சென்று கலந்து விடும்.   எனவே இம்முறை 2015 ஆம் வருடம் ஏற்பட்டது போல் மீண்டும் வெள்ளம் வராமல் நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததற்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.