டில்லி

மோட்டார் வாகன புதிய சட்டத்தின் அறிவித்துள்ள அதிக அபராதத்தால் மக்கள் கோபம் அடைவார்கள் என டில்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் வாகனச் சட்டம் திருத்தப்பட்டு புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் இன்று முதல் அமுலுக்கு வர உள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி அனைத்து போக்குவரத்து விதிமீறல்களுக்கும் அபராதம் 10 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.. இரு சக்கர வாகனங்களின் தலைக்கவசம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமலும் செல்வோருக்கான அபராதம் ரூ.100லிருந்து  ரூ.1000 ஆக்கப்பட்டுள்ளது. உரிமம் இன்றி ஓட்டுவோருக்கான அபராதம் ரூ.500லிருந்து ரூ. 5000 ஆக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி அதிக வேகத்தில் செல்வோருக்கு அபராதம் ரூ.400லிருந்து ரு.2000 ஆகவும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ2000லிருந்து ரூ.10000 ஆகவும்  உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதிக அபராதம் விதிப்பதால் குற்றங்கள் குறைந்து அதன் விளைவாக விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் மரணத்தின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து டில்லி போக்குவரத்து  காவல்துறையினர் செய்தியாளர்களிடம் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். காவலர் ஒருவர், “நாங்கள் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம் விதிக்கும் போது பலர் அதை ஏற்காமல் வாதிடுவார்கள். அவர்களிடம் ரூ. 100 மற்றும் ரு.500 அபராதம் வசூலிக்கவே கடும் பிரச்சினையாக இருக்கும். இந்நிலையில் இந்த அபராதம் 10 மடங்கு அதிகரிக்கும் போது அவர்கள் கோபம் இன்னும் அதிகமாகும். இவை அனைத்தையும் நாங்கள் தான் எதிர்கொள்ள வேண்டி வரும்” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பெண் காவலர், “பல நேரங்களில் இவ்வாறு விதிமீறல் செய்யும் பெண் பயணிகள் அவசரத்தில் இருப்பார்கள். அவர்களிடம் இவ்வளவு பணம் இருக்க வாய்ப்பு இல்லை. எனவே நாங்கள் அவர்களுக்கு நீதிமன்ற சலான் அளிக்க வேண்டி வரும் . அவர்கள் அதை எடுத்துக் கொண்டு நீதிமன்றம் சென்று வழக்கை எதிர்கொள்ள வேண்டும். இது தேவையற்ற வழக்குகள் எண்ணிக்கையை அதிகரிக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவருக்கு மாறாக மற்றொரு காவலர், “அபராதத் தொகை மிகவும் அதிகமாக உள்ளது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குற்றத்துக்கு அபராதத் தொகை 10 மடங்கு அல்லது 5 மடங்கு அதிகரித்துள்ளதால் மக்கள் துயருறுவார்கள்  என்பது உண்மை தான். ஆனால் இந்த அபராதம் காரணமாகப் போக்குவரத்து விதிமீறல் குறைவதோடும் விபத்துக்களும் அதனால் ஏற்படும் மரணங்களும் அதிக அளவில் குறையும் என்னும் அரசின் கருத்து சரியானது” எனத் தெரிவித்துள்ளார்.