சென்னை: தண்ணீரிலும் கண்ணீரிலும் மக்கள்; விடியவும் இல்லை. வடியவும் இல்லை – வாங்கிய ஓட்டுகளுக்காவது நன்றி காட்டுங்கள் என திமுக அரசுக்கு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை ராயபுரம் பகுதியில் மக்கள் வாழும் இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்ற ஒரு இயந்திரம் கூட வரவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாங் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மழை விட்டு 3 நாட்களாகியும், இன்னும் மழைநீர் வடியவில்லை. குறிப்பாக வடசென்னை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.  மழைநீர் இன்னும் வடியாத நிலையில், அடிப்படை வசதியின்றி மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், அங்கெல்லாம் இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை.  இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தண்ணீரிலும் கண்ணீரிலும் இராயபுரம்!

மக்கள் வாழும் இடங்களில் தண்ணீரை அகற்ற ஒரு இயந்திரமும் கூட வரவில்லை!

இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு கூட வழியில்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரமத்தின் சிகரத்தில் உள்ளார்கள்!

வீடு முழுவதும் தண்ணீர் இருக்க ஒரு இரும்பு கட்டிலில் எத்தனை பேர் உறங்க முடியும்?

சிறுக சிறுக சேர்த்து EMI-ல் வாங்கிய வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி நிற்கிறது.

தண்ணீர் வடியவில்லை என்றாலும் அவர்களது குறைகளை காது கொடுத்து கேட்பதற்கு கூட யாரும் வரவில்லை என கண்ணீர் வடிக்கின்றனர்‌.

இன்னும் எத்தனை நாட்கள் இதே நிலைமையில் என் மக்களை வைத்து இருக்க போகிறீர்கள்!!

உடனடியாக உங்கள் பார்வையை இங்கு திருப்புங்கள்!

கொஞ்சமாவது திருந்துங்கள்!

வாங்கிய ஓட்டுகளுக்காவது நன்றி காட்டுங்கள்!

விடியவும் இல்லை!

வடியவும் இல்லை!

இவ்வாறு தெரிவித்துள்ளார்.